வெளியிடப்பட்ட நேரம்: 18:46 (29/03/2018)

கடைசி தொடர்பு:18:46 (29/03/2018)

மனைவியின் பணியை நிரந்தரம் செய்யக்கோரி மதுரை கலெக்டர் ஆபீஸ் முன்பு தீக்குளித்த கணவர்!

ஆசிரியரான மனைவியின் பணியை நிரந்தரம் செய்யக்கோரி அவரது கணவர், மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சிக்கந்தர் சாவடியை அடுத்த தினமணி நகரைச் சேர்ந்தவர் ஜேசுராஜா. இவரது மனைவி லீயோ ஜெசிந்தா. இவர் மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இவருக்குப் பின்னால் பணியில் சேர்ந்தவர்கள் பலரும் நிரந்தரப் பணியாளராக நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ஜேசுராஜா, மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்கு இன்று வந்தார். திடீரெனத் தனது கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தற்கொலை முயற்சியில் அவர் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்தவர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தீயணைப்புத் துறையினரும் தீயை முழுமையாக அணைத்தனர். சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் வராததால் அரசு அமரர் ஊர்தியில் கொண்டு சென்றனர். ஜேசுராஜாவுக்கு 40 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரிடம் ஜேசுராஜா அளித்த மனுவில், ``எனது மனைவி பல ஆண்டுகள் பணியாற்றியும், நிரந்தம் செய்யப்படாமல் உள்ளார் . இது குறித்து சி.இ.ஓ, டி.இ.ஓ , மதுரை மறைமாவட்ட பேராயர், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பலரிடம் புகார் தெரிவித்தும் எனது மனைவி, பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .