“ஆங்கிலேயர்கள் வழங்கிய நிலத்தை ஆக்கிரமித்துவிட்டார்கள்!” - பாதிக்கப்பட்டவர்கள் புகார் | many have occupied the land provided by the British government, says victims

வெளியிடப்பட்ட நேரம்: 04:15 (30/03/2018)

கடைசி தொடர்பு:09:04 (30/03/2018)

“ஆங்கிலேயர்கள் வழங்கிய நிலத்தை ஆக்கிரமித்துவிட்டார்கள்!” - பாதிக்கப்பட்டவர்கள் புகார்

ஆக்கிரமிப்பு

பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட பல ஏக்கர் பஞ்சமி நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என பாதிக்கப்பட்டவர்கள், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம்  புகார்மனு அளித்தனர்.  

அந்தப் புகார் மனுவில், “1942-ம் ஆண்டு, அன்றிருந்த ஆங்கிலேய அரசாங்கம், பட்டியலின மக்களின் வாழ்வியல் நலன் கருதி, தமிழகம் முழுவதும் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை அவர்களுக்கு வழங்கியது. இதை வாங்கவோ, விற்கவோ கூடாது. மேலும், பட்டியலினத்தவர் அல்லாதோர் அந்த நிலத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பது சட்டம். இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கெட்டிசமுத்திரம் பகுதியில் உள்ள பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களைப் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என்றும் அவர்களிடமிருந்து அந்த நிலங்களை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இதுகுறித்து தமிழ்நாட்டு மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் அவர்களிடம் பேசினோம். “ஆங்கிலேயர் ஆட்சிக் ஆக்கிரமிப்புகாலத்தில் பட்டியலின மக்களுக்காக ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 4,168 ஏக்கர் பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது. ஒரு ஊருக்கு மொத்தம் 100 குடும்பங்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டனர். அதில் பட்டியலினத்தவர்களின் 80 குடும்பங்கள் மற்றும் ஏனைய பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த 20 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டனர். அந்தவகையில், ஈரோடு மாவட்டத்தில் அத்தாணி, அந்தியூர், கெட்டிசமுத்திரம் ஆகிய மூன்று ஊர்களுக்கும் 300 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கு தலா 5 ஏக்கர் நிலம் என மொத்தம் 1500 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. 

இதில் கெட்டிசமுத்திரம் பகுதியில் 80 பட்டியலின குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்களில், தற்போது 16 குடும்பங்களிடம் தான் நிலம் இருக்கிறது. மற்ற 24 குடும்பங்களின் சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், அத்தாணி அந்தியூர் ஆகிய பகுதிகளிலும் பலருடைய நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது. 

நாங்கள் ஏழை எளியவர்கள் என்பதாலும், சாதியச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்கள் என்பதாலுமே ஆங்கிலேய அரசு எங்களின் மீது இரக்கம் காட்டி விவசாய நிலம் வழங்கியது. அதுவும் இப்போது சாதிய மற்றும் அதிகார பலத்தால் ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கிறது.

இதுதொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், ‘பட்டியலின மக்களுக்குரிய பஞ்சமி நிலத்தை மீளப்பெற்று உரியவர்களிடம் கொடுக்க வேண்டும்’ என உத்தரவு பிறப்பித்தது. எனவே, 2015 தீர்ப்பை நடைமுறைப்படுத்தி ஆக்கிரமிப்பட்டுள்ள நிலத்தை மீட்டுத்தரவும், நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது திருத்தப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நீதி வழங்க வேண்டும்” என்றார்