“தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்!” - கொதிக்கும் கொங்கு ஈஸ்வரன்

காவிரி

“உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின்மீது, தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும்” என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்துக்குள் அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, இன்றைய (நேற்று) தினத்துடன் கெடு முடிந்திருக்கிறது. மத்திய அரசுக்கு எல்லா அதிகாரமும் இருந்தும், தங்களது அரசியல் சுய லாபத்துக்காக தமிழகத்தை வஞ்சித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. காவிரிப் பிரச்னையில் மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவாகவும், தமிழகத்துக்கு எதிராகவும் ஒருதலைபட்ச நடவடிக்கைகளை மேற்கொள்வது தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் இழைக்கும் செயல்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நாள்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், நீதித் துறையின் மீதுள்ள  நம்பிக்கையை மத்திய அரசே கேள்விக்குள்ளாக்கியிருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. அதிகாரத்தில் உள்ளவர்கள், தீர்ப்பை எப்படி வேண்டுமானாலும் உதாசீனப்படுத்தலாம் என்பதற்கு இது சான்றாக அமைந்திருக்கிறது. கடந்த 6 வாரங்களாக, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு செயல்படுவதைப்போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கினார்களே தவிர, மேலாண்மை வாரியம் அமைக்க தீவிர முயற்சி எதுவும் எடுக்கவில்லை.

காவிரி விவகாரம் நீண்டகாலமாக தீர்க்க முடியாத காரணத்தினாலும், பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பிறகுதான் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதை மத்தியில் ஆள்பவர்கள் நினைவில் கொள்ளாதது வேதனையளிக்கிறது. தமிழக அரசு, உச்ச நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தத் தகுந்த அரசியல் அழுத்தத்தை ஆரம்பத்திலிருந்தே கொடுத்திருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்காக மத்திய அரசு அவமதித்ததை, தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கிறோம் என்று மத்திய அரசு இழுத்தடிப்பது ஏற்புடையதல்ல. எனவே, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கவும், காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், தமிழக அரசு மௌனம் காக்காமல் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு உடனடியாகத் தயாராக வேண்டும். தமிழக அரசு, மத்திய அரசின்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!