வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (30/03/2018)

கடைசி தொடர்பு:09:15 (30/03/2018)

பங்குனி உத்திரத் திருவிழா..! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்..!

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று (30.03.18) நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.

 

trichendur murugan temple

 

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரையோரத் தலமுமான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆண்டு முழுவதும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் பங்குனி உத்திரத் திருவிழாவும் ஒன்று. இதை முன்னிட்டு, இன்று அதிகாலை 4 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் அடுத்து, வள்ளி அம்பாள் தபசுக்கு புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.  

திருச்செந்தூர்

மதியம் 2.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை , மாலை 4.30  மணிக்கு சுவாமி குமரவிடங்கப் பெருமாள் புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து, பந்தல் மண்டபம் முகப்பில் சுவாமி மற்றும் அம்பாள், 'தோள்மாலை மாற்றுதல்' நிகழ்ச்சி மற்றும் தீபாராதனை நடைபெறும்.  தொடர்ந்து சுவாமி , அம்பாள் ரத வீதிகளில் உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 

இரவு 7 மணிக்கு 108 மகா தேவர் சந்நிதி முன்பு, சுவாமி குமரவிடங்கப் பெருமாள் மற்றும் வள்ளி அம்பாளுக்கு கெட்டிமேளம் முழங்க திருக்கல்யாணம் நடைபெறும்.  திருக்கல்யாணத்தை முன்னிட்டு, இன்று இரவு ராக்கால அபிஷேகம் நடைபெறாது. முருகப் பெருமானுக்கு உகந்த உத்திரத் திருவிழா என்பதால், திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்துள்ளனர். வெளி மாவட்டங்களிலிருந்தும் மாலை அணிந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். கடற்கரைப் பகுதி, நாழிக்கிணறு பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதே போல,  நாலுமூலைக்கிணறு, அருள்மிகு குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலிலும், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற உள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க