எடப்பாடி பழனிசாமி ’மோதிரம்’; பன்னீர்செல்வம் ’தாலி பவுன்’! - மதுரையைத் திணறவைத்த திருமண விழா

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம்

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை பாண்டி கோயில் அருகே, 'அம்மா திடல்' என்று அழைக்கப்படும் இடத்தில்,  இன்று 120 ஜோடிகளுக்கு 70  சீர்வரிசைப்  பொருள்கள் வழங்கி திருமணம் நடத்திவைக்கப்பட்டது . இந்த விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சர்களும்  நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

திருமணம்

இந்தத் திருமண விழாவை சிறப்பாக நடத்த, கடந்த ஒரு மாதகாலமாக வேலைசெய்துவந்தார், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார். புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பாவின் துணையுடன், தன்னுடைய திருமங்கலம் தொகுதியில் மட்டும் இதுவரை 50000 பொதுமக்களுக்கு வேட்டி- சேலையுடன் விழா அழைப்பிதழை நேரடியாக வழங்கி, விழாவுக்கு அழைத்தார் . முதல்வர் மற்றும் துணை முதல்வருக்குப் பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது . இந்தத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற மேலூர் , கொட்டாம்பட்டி , உசிலம்பட்டி , திருமங்கலம் உள்ளிட்ட பல பகுதியிலிருந்து பொதுமக்கள் லாரி , வேன் என்று வாகனங்கள்மூலம் அழைத்துவரப்பட்டனர் . காலை 5 மணிக்கெல்லாம் பொதுமக்களைத் திரட்டி, வாகனத்தில் அழைத்துவரத் தொடங்கினர். இதனால், மதுரை முழுவதும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .

திருமணம்

சீருடை அணிந்த 50,000 ஜெயலலிதா பேரவைத் தொண்டர்கள், முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர் . 3 லட்சம் பேருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . திருமண ஜோடிகளுக்கு அனைத்து சீர் வரிசையையும்  எடப்பாடி பழனிசாமி சார்பில் மாப்பிள்ளைக்கு மோதிரமும், ஓ.பன்னீர்செல்வம் சார்பில் பெண்ணுக்குத் தாலிப் பவுனும் வழங்கப்பட்டது .  இந்த விழாவுக்காக, 10 கோடி ரூபாயை அமைச்சர் உதயகுமார் ஒதுக்கியுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன .


 இந்த நிகழ்ச்சிக்கு, மதுரை ஆட்சியர் வீர ராகவ ராவ் , காமராஜர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் செல்லதுரை  உள்ளிட்ட அரசு ஊழியர்கள் தங்கள் வீட்டு விழா போல கவனித்துவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!