வெளியிடப்பட்ட நேரம்: 11:38 (30/03/2018)

கடைசி தொடர்பு:11:38 (30/03/2018)

'நிஜத்தில்தான் வாழ முடியவில்லை... இறப்பிலாவது ஒன்றுசேர்வோம்...'  சென்னையில் தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி

தற்கொலை

 சென்னையில், நிஜத்தில் வாழ முடியாத காதல்ஜோடி, ஒன்றாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 சென்னை கொருக்குப்பேட்டையை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையம் அருகே, இன்று காலை, இரண்டு பேர் ரயிலில் அடிப்பட்டு இறந்துகிடப்பதாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு, 30 வயதுக்குட்பட்ட வாலிபர் ஒருவரும் 25 வயதுக்குட்பட்ட பெண் ஒருவரும் இறந்துகிடந்தனர். அவர்களின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, இறந்துகிடந்தவர்கள்குறித்து விசாரித்தனர். 

விசாரணையில், அவர்கள் இருவரும் அத்திப்புதுப்பட்டு நகரைச் சேர்ந்த ஆகாஷ், ரம்யா என்று தெரியவந்தது. போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், இவர்கள் இருவரும் காதல் ஜோடிகள் என்றும், காதல் விவகாரத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில்தான் இவர்கள் இருவரும் தற்கொலை செய்திருக்கிறார்கள். அந்தத் தண்டவாளத்தில், இருவரும் ஒன்றாகத் சேர்ந்து தலையை வைத்துள்ளனர். அப்போது, அவ்வழியாகச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் இருவர் மீதும் மோதியுள்ளது. அதில், ரம்யாவின் உடல் இரண்டு தூண்டாகியுள்ளது. ஆகாஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டுப் பலியாகியுள்ளார். 'நிஜத்தில்தான் ஒன்றாக வாழ முடியவில்லை, இறப்பிலாவது ஒன்றாகத் சேர்வோம்' என்று இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர். 

 காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.