'உரிமைகளைப் பெற்றுத்தர எங்களுக்கு அறிவு இருக்கு!' - ஜெயக்குமார் | We know to protect our farmers, says jayakumar

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (30/03/2018)

கடைசி தொடர்பு:12:25 (30/03/2018)

'உரிமைகளைப் பெற்றுத்தர எங்களுக்கு அறிவு இருக்கு!' - ஜெயக்குமார்

''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்றம் வரை செல்லவும் தயங்க மாட்டோம்'' என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார்

கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கிடையிலான காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்து நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு 6 வார காலக் கெடு விதித்துத் தீர்ப்பளித்தது. நேற்று மாலை 5 மணியுடன் தீர்பின் காலக்கெடு முடிவடைந்தது. இதுவரையிலும் மத்திய அரசிடமிருந்து காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக எந்தவொரு அறிக்கையும் வரவில்லை. 

இந்நிலையில், சென்னை செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  `காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டது. மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால், தமிழகத்தின் உரிமைகளை என்றும் விட்டுக்கொடுக்க மாட்டோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை செல்வோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடாத மத்திய அரசுமீது உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கா, வேறு வகையிலான முறையீடா என முடிவுசெய்யப்படும். விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க எங்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டு உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கு எங்களுக்கு அறிவு இருக்கிறது. எங்களுக்கு, மக்கள் அங்கீகாரம் இருந்தால்போதும்; எதிர்க்கட்சியின் அங்கீகாரம் தேவையில்லை. அ.தி.மு.க அரசு எதைச் செய்தாலும் எதிர்க்கட்சியான தி.மு.க குறைதான் சொல்லும். காங்கிரஸ் ஆட்சிசெய்தபோது, தி.மு.க இதுபோன்ற அழுத்தம் கொடுத்திருக்கிறதா? 17 ஆண்டுகளாக எதையும் செய்யாத இவர்கள், எங்களைக் குறை சொல்கிறார்கள். காவிரி விவகாரத்தில் குறை சொல்லாமல், அனைவரும் ஒரே அணியாகத் திரள வேண்டும். காவிரி விவகாரத்தில், கர்நாடகாவுக்கு சாதகமாகப் பேசிய பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவையும் விமர்சித்துப்' பேசினார்.