ஸ்மித் இப்படி நடந்துகொள்வது முதல்முறையல்ல! - காட்டிக்கொடுத்த இ-மெயில் | Umpire Had Allegedly Raised Doubts About Steve Smith and Warner in 2016

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (30/03/2018)

கடைசி தொடர்பு:12:40 (30/03/2018)

ஸ்மித் இப்படி நடந்துகொள்வது முதல்முறையல்ல! - காட்டிக்கொடுத்த இ-மெயில்

ஸ்திரேலியாவின் ஹீரோ ஸ்டீவன் ஸ்மித், ஒரே நாளில் வில்லனாகிவிட்டார். சிட்னி விமான நிலையத்தில் கண்ணீர்மல்க பேட்டியளித்தபோது, மனமுடைந்து அழுத ஸ்மித்தை, அருகிலிருந்த அவரின் தந்தை தேற்றினார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ஸ்டீவன் ஸ்மித் அடிக்கடி 'deeply sorry' என்கிற வார்த்தையைப் பயன்படுத்திக்கொண்டே இருந்தார். ஸ்மித்தின் அழுகை, உலக கிரிக்கெட் ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கியது. சச்சின் உள்ளிட்டவர்கள், ஸ்மித்துக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர். 

ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்

தென்னாப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா செல்வதற்காக, கேப்டவுன் விமான நிலையம் வந்த ஸ்டீவை, பாதுகாப்பு வளையம் அமைத்து போலீஸார் விமான நிலையத்துக்குள் அழைத்துவந்தனர். விமான நிலையத்தில் இருந்த சிலர், ஸ்மித்தைப் பார்த்து ' ஏய்... ஏமாற்றுக்காரா' என்று கத்தினர். செய்தியாளர் ஒருவர், ''உங்களை ஏமாற்றுக்காரர் என்று ரசிகர்கள் கூறுகிறார்களே... அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள?'' என்று கேள்வி எழுப்பினார். ஸ்மித் நடத்தப்பட்ட விதத்துக்கு, இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்ஸன் கண்டனம் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்லெஸிகூட, ''ஓராண்டுத் தடை அதிகம்'' என்று கருத்து வெளியிட்டுள்ளார். 

கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு கிடைத்தாலும், ஆஸ்திரேலிய நடுவர் டேரல் ஹார்பர் ஸ்மித், வார்னர் குறித்து ஆஸ்திரேலிய நடுவர்கள் தேர்வுக்குழு தலைவர்  சைமன் டர்ஃபுல்லுக்கு அனுப்பியுள்ள இ-மெயில், ஸ்மித் மீதான பார்வையை மாற்றவைத்துள்ளது. அதில், ''கடந்த  2016- ம் ஆண்டு நடந்த  Sheffield Shield தொடரில், விக்டோரியா அணிக்கு எதிரான போட்டியில் நியூசவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடிய ஸமித்தும், வார்னரும் பந்தை  சேதப்படுத்த முயன்றனர். நான் அவர்களை எச்சரித்தேன்.  நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், ஸ்டீவின்  நடத்தைகுறித்து நான் ஆச்சர்யப்படவில்லை''  என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஸ்மித், வார்னர் மீது கடுமை காட்ட, ஹார்பர் அனுப்பிய இ-மெயில்கூட காரணமாக இருக்கலாம். 

ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரரும், துணை கேப்டனுமான டேவிட் வார்னர்தான் பந்தை சேதப்படுத்தும் ஐடியாவை ஸ்மித்துக்குக் கொடுத்துள்ளார். இளம் வீரர் பேங்க்ராஃப்ட் பந்தை சேதப்படுத்த வேண்டுமென்று கூறியதும், வார்னர்தான். இரு மூத்த வீரர்களும் சேர்ந்து இளம் வீரரான பேங்க்ராஃப்ட்டின் கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பின்னடவை ஏற்படுத்திவிட்டனர். பெர்த்தில் தாயுடன் செய்தியாளர்களைச் சந்தித்த பேங்க்ராஃப்ட் மன்னிப்பு கேட்டார். 

ஏதோ ஒரு முறை தவறிழைத்து மன்னிப்பு கேட்டால், அந்த மன்னிப்புக்கு அர்த்தம் உண்டு. ஸ்மித்தின் மன்னிப்பில் அர்த்தம் இல்லை என்றே தோன்றுகிறது!

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க