வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (30/03/2018)

கடைசி தொடர்பு:10:52 (04/04/2018)

தடம் மாறும் தமிழிசை... காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு கொடி பிடிக்கும் தமிழக பி.ஜே.பி!’ #WeWantCMB

காவிரி ஆறு

முன்பைப்போலவே... இப்போது இன்னும் அதிகமாகத் தமிழகத்தில் காவிரிக்கு ஆதரவாய்க் குரல் எழுந்திருக்கிறது. அதில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்’ என்பதே வாதமாய் இருக்கிறது. ஆனாலும், கர்நாடகச் சட்டசபைத் தேர்தலால் மெளனம் காக்கிறது, மத்திய அரசு... அந்த அரசைச் சார்ந்திருப்பதால் காய் நகர்த்த முடியாமல் இருக்கிறது, தமிழக அரசு. இதன் விளைவு, கொதித்து எழுகின்றன எதிர்க்கட்சிகளும்... விவசாயச் சங்க அமைப்புகளும். 

உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு! 

காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கில், “காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை அமைப்பதற்கான திட்டத்தை ஆறு வாரங்களுக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்” எனக் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றம் விதித்த இந்தக் கெடு நேற்றுடன் (29-ம்) முடிவடைந்தது. இந்த நிலையில், ‘காவிரி மேலாண்மை வாரியம்’ என்பதற்குப் பதிலாக, ‘காவிரி மேற்பார்வைக் குழு’ என்ற ஒன்றை மத்திய அரசு அமைக்கவிருப்பதாகச் செய்திகள் கசிகின்றன. இதன் காரணமாகவே காவிரிக்கு ஆதரவாகக் குரல்கள் வலுக்கத் தொடங்கியிருக்கின்றன.

“மோடி வஞ்சித்துவிட்டார்!”

இதுகுறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “காவிரி நதிநீர்ப் பிரச்னையில் மேலாண்மை வாரியத்துக்குப் பதிலாக வேறு எந்த அமைப்பையும் ஏற்க மாட்டோம். பதவியில் நீடிப்பதற்குக் கைம்மாறாக மத்திய அரசிடம் அ.தி.மு.க. அரசு மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்தால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்” என்றார். 

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, “காவிரி வழக்கில் தீர்ப்பின் மூலம் தமிழகத்தைப் பிரதமர் மோடி வஞ்சித்துவிட்டார். தமிழகத்தைச் சிதைக்க வேண்டும், கர்நாடகாவில் வெற்றிபெற வேண்டும் என்பதே அவருடைய திட்டமாக இருக்கிறது. அதுவே, காவிரி வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பிரதிபலிக்கிறது” என்றார்.

பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “மத்தியில் ஆட்சி செய்யும் கட்சிகளுக்குக் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி மட்டுமே பிரதானமாகத் தெரிவதால் காவிரிப் பிரச்னையில், தெரிந்தே தமிழகத்துக்குத் துரோகம் செய்கின்றன. தமிழகத்தில் ஆட்சியில் உள்ள கட்சிகளும் தங்களுக்கு நாற்காலியே பிரதானம் என்று கருதுவதால், அவையும் தங்களின் லாபத்துக்காகக் காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகளைத் தாரைவார்க்கின்றன” என்றார். 

“தற்கொலை செய்துகொள்வோம்!”  

உச்ச நீதிமன்றம்இப்படி ஒருபுறம், தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் வேளையில்... மறுபுறம், மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்றத்தில் 15 நாள்களுக்கும் மேலாகப் போராட்டத்தை நடத்திவருகின்றனர், அ.தி.மு.க எம்.பி-க்கள். அவர்களது போராட்டத்தால் நாடாளுமன்றம் முற்றிலும் முடங்கியுள்ளது. “மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அ.தி.மு.க எம்.பி-க்கள் தற்கொலை செய்துகொள்வோம் என்றும், ராஜினாமா செய்வோம்” என்றும் அவர்கள் பேசினர். எனினும், அவர்களது போராட்டத்துக்குச் செவி கொடுக்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்துவருகிறது. 

அதிலும் குறிப்பாக... பிரதமர் மோடி இதுகுறித்து அறவே வாய் திறக்கவில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் மத்தியஸ்தராய் இருக்க வேண்டிய மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்குக் காலக்கெடு எதையும் நிர்ணயிக்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மிகவும் கடினமான பணி. அது எப்போது அமைக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது” என்கிறார். மத்திய அமைச்சர்தான் அப்படியென்றால், தமிழகத்தைச் சேர்ந்த பி.ஜே.பி. பிரபலங்கள் சொல்லும் கருத்துகள் அதற்குமேல் இருக்கின்றன. 

“காவிரி விவகாரத்தில் நடப்பது அரசியலா?” 

பி.ஜே.பி. தேசியச் செயலாளர் ஹெச். ராஜா,“காவிரி நதிநீர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அல்லது ஆணையம் அமைக்க வேண்டும் என்ற வார்த்தைகள் இல்லை. நதிநீர்ப் பங்கீடு குறித்த திட்டம் வேண்டும் என்றுதான் இருக்கிறது” என்கிறார்.  மத்திய இணையமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன், “காவிரிப் பிரச்னையை இந்த அளவுக்கு மோசமாக எடுத்துச் சென்றதற்கு முழுக் காரணம் காங்கிரஸ்” என்று அந்தக் கட்சி மீது குற்றஞ்சாட்டுகிறார்.

மேலும் அவர், “நவநீதகிருஷ்ணன் எம்பி. (காவிரி விவகாரம் குறித்துப் பேசியபோது) தற்கொலை செய்யப்போவதாகக் கூறுகிறார். அவர் வீட்டில் உள்ளவர்கள் இதற்கு ஒப்புக்கொள்வார்களா; கட்சிக்கார்கள் ஒப்புக்கொள்வார்களா; தமிழ்நாடு ஒப்புக்கொள்ளுமா அல்லது விவசாயிகள்தான் ஒப்புக்கொள்வார்களா” என்று நம்மிடமே கேள்வி கேட்கும் அவர்... கடைசியில், “ ‘எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று சொன்னார்கள். பிறகு, தி.மு.க. உறுப்பினர்கள் ராஜினாமா செய்யப்போவதாகச் சொன்னார்கள். எதுவும் நடக்கவில்லை. ஏன் விவசாயிகளை ஏமாற்றவேண்டும்? இப்போது நடந்துகொண்டிருப்பது முழுக்க முழுக்க அரசியல்” என்கிறார். ஆம், உண்மையிலேயே காவிரி விவகாரத்தில் நடப்பது அரசியல்தான். 

மு.க.ஸ்டாலின், ஹெச்.ராஜா

“பி.ஜே.பி-யால்தான் முடியும்!” 

தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “ராஜினாமா செய்யச் சொன்னாலே ஒருவர்கூட வரமாட்டார்கள்; தற்கொலை செய்யவா அ.தி.மு.க எம்.பி-க்கள் வருவார்கள்” என்று கிண்டலடிக்கிறார். மேலும் அவர், “மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைத்தாலும்... குழு அமைத்தாலும் தமிழகம் அதை ஏற்க வேண்டும்” என்கிறார். அதேவேளையில், ‘காவிரி விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு  வஞ்சித்துவிட்டது’ என்று கருத்து தெரிவித்திருந்த தமிழக அரசியல் தலைவர்களுக்கு.... தன் முகநூல் பக்கத்தில், “தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் சிறிதளவும் பி.ஜே.பி-க்கு இல்லை. காவிரி மேலாண்மை அமைய வேண்டும் என்றால், அது பி.ஜே.பி-யால்தான் முடியும். இன்று தமிழகம் வஞ்சிக்கப்பட்டு விட்டது எனக் கூறுபவர்கள் தமிழகத்தை நெடுநாள் வஞ்சித்தவர்கள் என்பதை மறுக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.  

நிதின் கட்கரியுடன் மாநில பி.ஜே.பி-யினர்

இப்படி, மத்திய அரசுக்குச் சாதகமாய்க் காய் நகர்த்துவதுதானே மாநிலத்தில் இருக்கும் அந்தக் கட்சியின் பிரதிநிதிகளுடைய கடமை. அதைத்தானே அவர்கள் செய்கிறார்கள்; செய்துகொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது மத்திய அரசின் முழுக்கவனமும் கர்நாடகத் தேர்தல் மீதே இருக்கிறது என்பதைக் காட்டுவதோடு, காவிரி மேலாண்மை வாரியம் என்பது கைகழுவப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்