'சசிகலாவுக்கு 35 ஆண்டுகளாக நிம்மதி இல்லை..! ' - நடராசன் படத்திறப்பு விழாவில் கண்ணீர் விட்ட திவாகரன் | Natarajan photo opening ceremony - Divakaran praised sasikala

வெளியிடப்பட்ட நேரம்: 13:24 (30/03/2018)

கடைசி தொடர்பு:13:46 (30/03/2018)

'சசிகலாவுக்கு 35 ஆண்டுகளாக நிம்மதி இல்லை..! ' - நடராசன் படத்திறப்பு விழாவில் கண்ணீர் விட்ட திவாகரன்

நடராசன் படத்திறப்பு விழா

சிகலாவின் கணவர் நடராசன் படத்திறப்பு விழா, இன்று காலை 10.30 மணியளவில் தஞ்சாவூரில் உள்ள தமிழரசி மண்டபத்தில் நடைபெற்றது. 

நடராசன் படத்திறப்பு விழாவைத்  தொடங்கிவைத்துப் பேசிய தினகரன், " சசிகலாவுக்கு மாப்பிள்ளை பார்த்தபோது,  டாக்டர்கள், இன்ஜினியர்கள் எனப் பல வரன்களைப் பார்த்தனர். நடராசன் நல்லவர் என்பதால், அவரை என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சசிகலாவுக்குத் திருமணம் செய்துவைத்தனர். சசிகலா நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பல தியாகங்களைச் செய்தவர் நடராசன்" என்றார். 

இதையடுத்து பேசிய பழ.நெடுமாறன், " எங்கள் குடும்பத்தில் ஜாதகம் பார்க்காமல் செய்யப்பட்ட திருமணம், சசிகலா-நடராசன் திருமணம்தான். அதற்கு முன்பும் பின்பும் ஜாதகம் பார்க்காமல் யாருக்கும் திருமணம் நடைபெறவில்லை. முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் அமைவதற்குப் பெரும் துணையாக இருந்தவர் நடராசன்தான்" என்றார். 'கல்லணைக்கும் பெரியகோயிலுக்கும் வருகின்றவர்கள், முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கும் வருவதுபோல நினைவுச் சின்னத்தை அமைத்த நடராசன், இன்னும் மறையவில்லை. அவர் நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்" என நெகிழ்ந்தார் நல்லகண்ணு.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தன்னுடைய பேச்சில், " எதையும் தாங்கிக்கொள்ளும் சசிகலா, நடராசன் மறைவையும் தாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய நடராசன், எந்தப் பதவிக்கும் ஆசைப்படவில்லை" என்றார். இறுதியாகப் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், " சசிகலாவைப் பார்த்து நான் ரொம்பவே பயப்படுவேன். எதுவாக இருந்தாலும் அவரிடம் உரிமையாகக் கேட்டுப் பெறுவேன். 35 ஆண்டுகளாக சசிகலாவுக்கு நிம்மதியே இல்லை. துன்பத்துக்கு மேல் துன்பங்களைச் சந்தித்துவருகிறார்" என்று கண்கலங்கியபடிப் பேசினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க