பத்திரப்பதிவுத் துறையில் ஆன்லைன் பதிவுக்குத் தடா..?! - ஆஃப் லைன் பதிவுக்கு க்ரீன் சிக்னல்

பதிவுத்துறை

 தமிழக பதிவுத்துறையில், ஆன்லைன் பதிவில் ஏற்பட்ட சிரமங்களைத் தொடர்ந்து, ஆஃப் லைன் பதிவுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஆன்லைன் பதிவு தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 
 
கடந்த 12.2.2018-ம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் தமிழகப் பதிவுத்துறையில், 'ஸ்டார் 2.0' என்ற இணையதள ஆவணங்கள் பதிவுத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில், சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகப் பதிவுத்துறை அலுவலகங்களிலிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் பதிவுத்துறைக்குத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால், ஆன்லைன் பதிவுத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த, பதிவுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் ஒருகட்டமாக, கடந்த 14.2.2018ல் பதிவுத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், '10 நிமிடங்களுக்கு மேல் பொது மக்களைக் காக்கவிடாமல், உடனடியாக பத்திரப் பதிவை முடித்து, துரித சேவை வழங்க வேண்டும்' என்று பதிவுத்துறை அலுவலகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஆன்லைனில் மட்டுமே ஆவணங்கள் பதிவுசெய்யப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்திய பதிவுத்துறை, சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஆஃப் லைனிலும் ஆவணங்களைப் பதிவுசெய்யலாம் என்று தெரிவித்துள்ளது. 
 இதுகுறித்து தமிழகப் பதிவுத்துறையின் கூடுதல் பதிவுத்துறைத் தலைவர் (வழிகாட்டி), அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்...

 "இணைய வழியில் ஆவணப்பதிவுகள் மேற்கொள்வதற்கு ஏதேனும் சிரமங்கள் ஏற்படும் நிலையில், ஆஃப் லைன் துணைப்பதிவுத் துறை தலைவரின் ஆணை பெற்று, பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆவணங்கள், இணைய வழி முன் சரிபார்ப்புக்கு அனுப்பப்படுகிறது. அதன்பிறகு, பதிவு அலுவலரின் ஆய்வுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல்செய்யப்படுகின்றன. அப்போது, ஆன்லைனில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, ஆஃப் லைனிலும் ஆவணங்களைப் பதிவுசெய்யலாம்.  இதற்காக, துணைப்பதிவுத்துறை தலைவரின் ஒப்புதல்  பெறத் தேவையில்லை. நாளை (31.3.2018) அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் செயல்படும். அன்றைய தினம் பதிவுக்கு வரும் ஆவணங்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும். இணையவழி ஆன் லைன் மற்றும் இணைய இணைப்பற்ற வழி ஆஃப் லைன் ஆகிய இரண்டு முறைகளிலும் பதிவுசெய்யும் நடைமுறை 30.6.2018 வரை அமலில் இருக்கும் 

மேலும், 'அரசு பதிவுத்துறைத் தலைவரின் ஆணைகளுக்குட்பட்டு பதிவுக்குத் தாக்கல்செய்யப்படும் எந்த ஆவணத்தையும் பதிவு செய்யாமல், பொது மக்களைத் திருப்பி அனுப்பக் கூடாது' என பதிவு அலுவலர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. இதைப் பின்பற்றாமல் ஆவணப்பதிவுக்கு வரும் பொதுமக்களைத் திருப்பி அனுப்பும் பதிவு அலுவலர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 இதுகுறித்து பதிவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "ஆன்லைன் பதிவுக்கு முன்பு வரை கம்ப்யூட்டர் மூலம்தான் பதிவுகள் நடந்தன. தற்போது, பதிவுக்கான அனுமதி உள்ளிட்ட சில பணிகளும் ஆன் லைன்மூலம் நடந்துவருகின்றன. ஆன்லைனில் பதிவுகள் நடக்கும்போது ஏற்பட்ட சிரமங்கள்குறித்து பொது மக்களும், பதிவுத்துறை அலுவலகங்களிலும் தெரிவிக்கப்பட்டன. அதன்பிறகே, ஆஃப் லைன் பதிவுக்கு பதிவுத்துறை அனுமதி அளித்துள்ளது. ஆன்லைன் பதிவுக்கான சாஃப்ட்வேருக்கான பணிகள், கடந்த சில ஆண்டுக்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டன. இதனால், சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஆஃப் லைன் ஆவணங்கள் பதிவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால், இனி ஆன் லைன் பதிவு தொடர்வதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது" என்றனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!