கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நியாயமாக நடக்குமா? - கொதிக்கும் எதிர்க்கட்சிகள் | more complaints regarding co-operative election

வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (30/03/2018)

கடைசி தொடர்பு:15:46 (30/03/2018)

கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நியாயமாக நடக்குமா? - கொதிக்கும் எதிர்க்கட்சிகள்

கூட்டுறவு சங்கத் தேர்தல்

தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை, மீன் வளத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை உட்பட 15 அரசுத் துறைகளில் மொத்தம் 18,775 கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இவற்றுக்கு 5 கட்டங்களாக கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் தொடக்கநிலை அமைப்புகளான 18,435 சங்கங்களுக்கு ஏப்ரல் மாதம் 2- ம் தேதி தொடங்கி 23- ம் தேதி வரை தேர்தல் நடத்தப்படவுள்ளது. 

முதல்கட்டத் தேர்தலுக்கான மனுத்தாக்கல் கடந்த 26 ம் தேதி தொடங்கியது. மறுநாள் மனுக்கள் பரிசீலனை நடந்தது. முதலில் வேட்பு மனுக்களை ஆளும் கட்சிக்கு மட்டுமே தந்துவிட்டு மற்ற கட்சியினருக்கும் சுயேச்சைகளுக்கும் மறுக்கப்பட்டதாகவும் மாநிலம் முழுவதும் பிரச்னை உண்டானது. முறைகேடு செய்த அதிகாரிகளைக் கண்டித்து போராட்டங்களும் நடந்தன. பல இடங்களில் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். அதையடுத்து 27 ம் தேதி மனுக்கள் பரிசீலனையின்போது அலுவலகத்துக்கு வராமல் அதிகாரிகள் காலம்தாழ்த்தியதாகவும் ஆளும் கட்சியினர் குறிப்பிடும் மனுக்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவித்து மற்றவர்களின் மனுக்களை நிராகரித்ததாகவும் மற்ற கட்சியினர் போராட்டங்களில் இறங்கினர். 

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம் பொற்பந்தல், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்திருந்த பலர், போராட்டத்தில் ஈடுபட்டனர். விதிமுறைகளை மீறி தேர்தல் நடைபெறுவதாகவும், ஆளுங்கட்சியினர் தேர்தல் அதிகாரிகளுக்குப் பணம் அளித்து தகுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளதாகவும் கம்மாளம்பூண்டி வேளாண்மை கூட்டுறவுச் சங்க வங்கியில் தேர்தல் முறைகேடு நடப்பதாக அலுவலகத்திற்குப் பூட்டு போடும் போராட்டம் நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம், லத்தூர், திருப்போரூர் மதுராந்தகம் உட்பட மாவட்டம் முழுவதும் காரணமின்றி வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டுறவுத் துறை அலுவலர்களிடம் முறையிட்டும் அவர்கள் உரிய பதில் கூறவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில், மாவட்ட மகளிர் தையல் தொழில் கூட்டுறவுச் சங்கத்திற்கு 7 இயக்குநர் பதவிகள் உள்ளன. அதிமுக சங்கத்தின் சார்பில் 7 பேர், திமுகவின் சார்பில் 7 பேர், சிஐடியு சார்பில் தையல்தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.மாரிக்கண்ணு உட்பட மொத்தம் 15 பேர் களத்தில் உள்ளனர். 15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலும் ஒட்டப்பட்டுவிட்டன. ஆனால், அதிமுக வேட்பாளர் பட்டியலில் உள்ள 7 பேரைத் தவிர மற்ற 8 பேரையும் தகுதிநீக்கம்செய்துவிட்டு, அதிமுகவினரைப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கும் வகையில் அதிகாரிகள் செயல்பட்டதாகப் பிரச்னை எழுந்தது. அதிகாரிகளின் துணையோடு அதிமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அதைக் கண்டித்து தையல் கூட்டுறவுச் சங்க அலுவலகம் முன்பு புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

குமரி மாவட்டத்தில் உள்ள 464 கூட்டுறவுச் சங்கங்களில் 114 சங்கங்களுக்கு முதல் கட்டத் தேர்தல் நடத்தப்படுகிறது. தோவாளை வட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவுச் சங்கத்தில் 571 வாக்காளர் பட்டியலை மீன்வளத் துறை வெளியிட்டது. ஆனால், ஆளும்கட்சிப் பிரமுகர் சகாயம் என்பவர் கொடுத்த 449 வாக்காளர் பட்டியலை வைத்து கூட்டுறவு இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜா அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் தற்காலிகத் தேர்தல் அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்டதும், அவர்களுடன் இணைப் பதிவாளர் சமரச முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், பூதப்பாண்டி போலீஸ் ஆய்வாளர் பென்சாம் உதவியுடன் சகாயம், எதிர்க்கட்சியினரை மனுத்தாக்கல் செய்யவிடாமல் தடுத்ததாக மீண்டும் பிரச்னை எழுந்தது. 

செவ்வாயன்று மாலை 5 மணிக்குள் முறைப்படி வேட்பாளர் பட்டியலையும் ஒட்டவில்லை. ஆளும் கட்சிக்குச் சாதகமாகவே அதிகாரிகள் இப்படிச் செய்ததாகப் பேச்சிப்பாறை, குலசேகரம் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடந்தன. மறுநாள் காலையில் வீரநாராயணசேரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நேற்று காலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், விஜயதாரணி, ராஜேஸ்குமார், மனோ தங்கராஜ், ஆஸ்டின், சுரேஷ்ராஜன் ஆகியோர் உட்பட பலரும் மாவட்ட இணைப்பதிவாளர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். 

மாநிலம் முழுவதும் முதல் கட்டத் தேர்தல் நடத்தப்படும் இடங்களில் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளநிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், மாநிலக் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் ஆணையரும், தமிழ்நாடு காவல்துறைத் தலைவரும் உடனடியாக சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பித்து கூட்டுறவுச் சங்கத் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கூட்டுறவு சங்கம்

``மாவட்ட ஆட்சித் தலைவர்களோ கண் மூடி கை கட்டி வாய்பொத்தி நிற்க, உள்ளூரில் உள்ள காவல்துறை அதிகாரிகளோ அதிமுகவினருடன் கைகோத்து தேர்தல் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற செய்தி தி.மு.க. மாவட்ட கழகச் செயலாளர்களிடமிருந்து தினமும் வந்து கொண்டேயிருக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார். 

சிபிஐ-எம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனோ, ``ஆட்சேபணை எழுப்பப்பட்டுள்ள இடங்களில் மறுதேர்தல் தேதி அறிவித்து, ஜனநாயகப்பூர்வமாக தேர்தல் நடத்தவேண்டும்; மாநிலம் முழுவதும் நடந்துவரும் அத்துமீறல்களையும் அராஜகத்தையும் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் ஆணையமும் தமிழக அரசும் தடுத்துநிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். 

கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நியாயமாக நடக்குமா என்று சந்தேகம் தெரிவித்துள்ள பாமக தலைவர் கோ.க.மணி, `` கூட்டுறவுச் சங்கங்களுக்கு 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் அதிகாரிகளின் உதவியுடன் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நிகழ்த்தப்பட்டன. பல இடங்களில் அதிமுகவினரைத் தவிர மற்றவர்களால் வேட்புமனுவைத் தாக்கல்செய்யக்கூட முடியவில்லை. சில இடங்களில் தேர்தலே நடத்தாமல் அதிமுகவினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட கொடுமைகளும் நடந்தன. அதைப்போல இல்லாமல் இந்த ஆண்டாவது கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களை நேர்மையாக நடத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இதற்காக மத்திய அரசு உயரதிகாரிகளை கண்காணிப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்றும் கோ.க.மணி கோரிக்கை விடுத்துள்ளார். 

இதற்கிடையில், மாற்றுத்திறனாளிகளை கூட்டுறவுத் தேர்தலில் பங்கேற்கவிடாமல் தடுப்பதாக பிரச்னை எழுந்தது. அதைக் கண்டித்தும் பல அமைப்புகள் போராட்டங்கள் நடத்திவருகின்றன. 

முதல் கட்டத் தேர்தல் நடைமுறைகளிலேயே இத்தனை குற்றச்சாட்டுகள் என்றால், ஒட்டுமொத்த கூட்டுறவுச் சங்கத் தேர்தலும் நியாயமாக நடக்குமா எனக் கடும் அதிருப்தியில் உள்ளன. கூட்டுறவுச் சங்கத் தேர்தல் அதிகாரிகளுக்கான கையேடு என்றெல்லாம் வெளியிட்டு அமர்க்களப்படுத்தியுள்ள கூட்டுறவுத் தேர்தல் ஆணையம், அதை நடைமுறையில் காட்டவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்! 


டிரெண்டிங் @ விகடன்