தியேட்டரில் சிக்கிய பிரபல ரவுடி! - சினிமா சேஸிங் போல நடந்த கைது சம்பவம் | Rowdy caught in cinema theatre

வெளியிடப்பட்ட நேரம்: 16:06 (30/03/2018)

கடைசி தொடர்பு:16:06 (30/03/2018)

தியேட்டரில் சிக்கிய பிரபல ரவுடி! - சினிமா சேஸிங் போல நடந்த கைது சம்பவம்

ரவுடி


சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பிரபல மால் ஒன்றில், நேற்றிரவு சினிமா பார்த்துக்கொண்டிருந்த பிரபல ரவுடி சின்னராஜை போலீஸார் பிடித்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 வழக்கமாக, சினிமாவில்தான் ரவுடிகளை போலீஸார் பிடிக்கும் காட்சிகள் திரில்லிங்காகக் காட்டப்படும். சென்னையில் சினிமா  பார்த்துக்கொண்டிருந்த பிரபல ரவுடியை ஹாலிவுட் பட பாணியில் போலீஸார் பிடித்துச்சென்றுள்ளனர்.  

 சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கானத்தூர் பகுதியில் உள்ள பிரபல மாலுக்கு, முன்பு சீருடையில்லாத போலீஸார் திடீரெனக் குவிந்தனர். அவர்கள், மாலுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அடுத்து, துப்பாக்கி முனையில் வாலிபர் ஒருவரைப் பிடித்துக் கொண்டு வெளியில் வந்தனர். இது, மாலில் சினிமா பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 போலீஸாரிடம் சிக்கிய வாலிபர், அடுத்த சில நிமிடங்களில் காரில் ஏற்றப்பட்டார். அங்கிருந்து அந்த கார், மின்னல் வேகத்தில் பறந்தது. யார் அவர் என்று விசாரணையில் களமிறங்கினோம். போலீஸாரிடம் சிக்கியவர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, வீரவாஞ்சிநாதன் நகரைச் சேர்ந்த ரவுடி சின்னராஜ் என்று தெரிந்தது. இவர்மீது இரண்டு கொலை வழக்குகள், கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 33-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "கோவில்பட்டியில் உள்ள ஒரு வழக்கில் சின்னராஜை தேடிவந்தோம். அவர், சென்னையில் இருக்கும் தகவல் எங்களுக்குக் கிடைத்தது. அதன்பேரில் சென்னை வந்து, சின்னராஜின் நடவடிக்கைகளைக் கண்காணித்தோம். அப்போது, அவர் கானத்தூரில் உள்ள மாலில் சினிமா பார்க்கும் தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்று அவரைப் பிடித்துள்ளோம். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

ரவுடி சின்னராஜ் குறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி ரகம். சின்னராஜின் சகோதரியை ஒருவர் காதலித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சின்னராஜ், அவரை வெட்டிக் கொலைசெய்துள்ளார். இந்தச் சம்பவம், சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது. சின்னராஜ் மீது 2010-ம் ஆண்டு முதல் வழக்குகள் உள்ளன. 2014ல் ஒரு கொலை வழக்கும், 2015ல் ஒரு கொலை வழக்கும் உள்ளது. அதுதவிர, ஏழு கொலைமுயற்சி வழக்குகளும் உள்ளன. கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில், சின்னராஜுக்கு ரவுடிகள் சரித்திர பதிவேடு உள்ளது. கடந்த சில மாதங்களாக சின்னராஜ், சென்னையில் தங்கியிருந்துள்ளார். இந்தச் சமயத்தில்தான் டாக்டரை மிரட்டிய விவகாரத்தில் சிக்கியுள்ளார். அதுதொடர்பாகத்தான் தனிப்படை போலீஸார் சின்னராஜைப் பிடித்துள்ளனர். 

 போலீஸாரிடம் சின்னராஜ் சிக்கியதும், அவரை என்கவுன்டர் செய்யப்போவதாகவும் தகவல் வேகமாகப் பரவியது. இதனால், சின்னராஜை அழைத்துச்சென்ற வாகனத்தை அவரது தரப்பினர் பின்தொடர்ந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.