`தேர்தல் அதிகாரி கடத்தலா?' - அரியலூரில் பரபரக்கும் கூட்டுறவுச் சங்கத் தேர்தல்

`தேர்தல் அதிகாரி கடத்தலா?' - அரியலூரில் பரபரக்கும் கூட்டுறவுச் சங்கத் தேர்தல்

கூட்டுறவுச் சங்கத் தேர்தல் அதிகாரியை கொறடாவின் ஆட்கள் கடத்திவிட்டார்கள் எனக் கூறி சங்கத்துக்குப் பூட்டு போட்டு தி.மு.க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                          

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தில் பாரதியார் நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் இயங்கி வருகிறது. இந்தக் கூட்டுறவுச் சங்கத்திற்கு இயக்குநர் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் அதிகாரியாக வாரியங்காவல் செங்குந்தர் கைத்தறி கூட்டுறவுச் சங்க மேலாளர் பாலசுந்தரம் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து கடந்த 26-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. 7 சங்க இயக்குநர்கள் பதவிகளுக்கு 21 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.


                       

மனுத்தாக்கல் முடிந்து மாலையில் வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள் விவரங்களை விளம்பரப் பலகையில் ஒட்ட வேண்டும். இந்நிலையில், தேர்தல் அதிகாரி வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் கடந்த 27-ம் தேதி மதியம் டீ குடிக்கச் சென்றுவருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றவர் மீண்டும் அலுவலகம் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சங்க உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஞானமூர்த்தி தலைமையில் 3 நாள்களாக தேர்தல் அதிகாரியைத் தேடினர். அவர் எங்கு சென்றார் எனத் தெரியாததால் வேட்பாளர்கள் கூட்டுறவுச் சங்கத்துக்குப் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

                                 

அதில், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதுமட்டுமல்லாமல், இங்கு தேர்தல் அதிகாரியை கொறடாவின் ஆட்கள் கடத்திவிட்டதாக கோஷமிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். அப்போது, இதற்கு ஒரு முடிவு தெரியும் வரை விடப்போவதில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!