வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (30/03/2018)

கடைசி தொடர்பு:19:40 (30/03/2018)

``பராமரிப்புப் பணிகளுக்காக ஆலையை மூடி நாடகம் நடத்துகிறார்கள்” ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் சுப.உதயகுமார்

``பராமரிப்புப் பணிகளுக்காக ஆலையை மூடி நாடகம் நடத்துகிறார்கள்” ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் சுப.உதயகுமார்

``பராமரிப்புப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை 15 நாள்கள் மூடி நாடகம் நடத்துகிறார்கள்” என்று விமர்சித்திருக்கிறார் பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமார்

ஸ்டெர்லைட்
இயற்கை வளங்களையும், மக்களின் வாழ்வாதாரங்களையும் சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் விழிப்பு உணர்வுக் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள வந்திருந்த பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமாரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``மத்திய அரசும், பிரதமர் மோடியும் உச்சநீதிமன்றத்தை அவமதித்ததோடு, அரசியல் சாசனத்தையே மீறி தமிழகத்தை வஞ்சித்துள்ளனர். உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாகக் கால வரையறை வகுத்து தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், கடைசி நேரம் வரை காத்திருந்துவிட்டு `ஸ்கீம்’ (திட்டம்) என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்று 8 கோடி தமிழர்களை மடையர்கள் ஆக்குகிற மிக மோசமான செயலை மத்திய அரசு செய்திருக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்திய தேசியம் பேசுகிறவர்கள், நாட்டை தெய்வமாக மதிக்க வேண்டும் என்பவர்கள்,தேச பக்தர்கள் என்று தங்களை வர்ணித்துக் கொள்பவர்கள், இந்த தேசியத்தின் அடிப்படை ஒற்றுமையைச் சீர்குலைக்கும் விதமாக நடந்துள்ளனர்.

 

அரசுக்கு எதிராகப் பேசுபவர்களை தேச துரோகிகள், அந்நிய நாட்டின் கைக்கூலிகள், நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகள், விடுதலைப் புலிகள் என்று வர்ணிப்பவர்களை நாங்கள் எப்படி அழைப்பது ? அரசியல் சாசனத்தை மீறி, உச்சநீதிமன்றத்தை அவமதித்து, 8 கோடி தமிழர்களை மிக மோசமாக வஞ்சித்த இந்த நடைமுறையை எப்படி வர்ணிக்க வேண்டும் ? தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துபவர்களை எப்படி அழைப்பது என்று நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை மண்ணை மலடாக்கி வருவதோடு கடலை நஞ்சாக்கி, காற்றையும் சுவாசிக்க முடியாதவாறு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி வருகிறது. மக்களை கடுகளவும் மதிக்காமல் ஆலையை விரிவாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதற்கு எதிராகத்தான் மக்கள் அங்கு அறவழியில் போராடி வருகின்றனர். கூடங்குளம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ ஆகிய திட்டங்கள் வேண்டாம் என்று மக்கள் போராடுகின்றனர். ஆனால், மக்களை மதிக்காத மத்திய அரசு அந்தத் திட்டங்களை விரிவாக்க அனுமதி வழங்குகிறது. நரேந்திர மோடியின் அரசு ஜனநாயகத் தன்மையில்லாதது. இவர்கள் மக்களுக்கு மதிப்பளிக்காதவர்கள். என்ன நடந்தாலும் சரி 8 கோடி தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம். பராமரிப்புப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை 15 நாட்கள் மூடிவிட்டு திருட்டு நாடகம் நடத்தி வருகிறார்கள்” என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க