வெளியிடப்பட்ட நேரம்: 19:43 (30/03/2018)

கடைசி தொடர்பு:19:43 (30/03/2018)

மோடியின் வருகைக்குக் கறுப்புக் கொடி எதிர்ப்பு ஸ்டாலின் திட்டவட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தப் பிரச்னையில் மத்திய அரசுக்குப் போதுமான அளவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என அ.தி.மு.க அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், தி.மு.க செயற்குழு கூட்டம் அவசரமாக இன்று கூட்டப்பட்டது.

தி.மு.க செயற்குழு

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துரைமுருகன் `காவிரி பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட தலைவர் கலைஞர் சட்டபூர்வ நடவடிக்கை எடுத்ததால்தான், இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் சூழ்நிலையைக் கொண்டு வந்தோம். இதற்கெல்லாம் தி.மு.க பாடுபட்டதை யாரும் மறந்துவிடக் கூடாது. இப்போது இருக்கும் அ.தி.மு.க அரசு, மத்திய அரசுக்குப் போதுமான அளவிற்கு நெருக்கடி கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்கள். அதனால்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் காவிரி பிரச்னையின் முக்கியத்துவத்தைக்  கருதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கினார். ஆனால், அந்த ஆலோசனை எல்லாம் கேட்காமல், அவர்கள் தங்கள் இஷ்டம்போல் செயல்பட்டு, மத்திய அரசின் மனம் கோணாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பைப் பதிவு செய்ய வரும் ஏப்ரல் 2ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது' என்றார்.

இந்தக் கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர். அதற்காக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மார்ச் 29ம் தேதி கெடு முடியட்டும் என்று கூறிவிட்டு, இப்போது தி.மு.க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டிய அதே தினத்தில், தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இது ஏமாற்று வேலை. வரும் ஏப்ரல் 15ம் தேதியில், ராணுவக் கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகத் தமிழகம் வரும் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகக் கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க