வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (30/03/2018)

கடைசி தொடர்பு:22:30 (30/03/2018)

`எம்.பி-க்கள் ராஜினாமா செய்தால்தான் கடைகளை அடைப்போம்' - விக்கிரமராஜாவிடம் கொந்தளித்த வணிகர்கள்!

`எம்.பி-க்கள் ராஜினாமா செய்தால்தான் கடைகளை அடைப்போம்' - விக்கிரமராஜாவிடம் கொந்தளித்த வணிகர்கள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசைக் கண்டித்து மிகப்பெரிய அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஏற்பாடு செய்து வருகிறார். ஆனால், இதற்கு வணிகர்கள் ஒரு நிபந்தனை விதித்துள்ளார்கள். 

விக்கிரமராஜா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்துவிட்டது. ஆனால், மத்திய அரசு இதுகுறித்து வாய் திறக்கவே இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு இந்த ஆண்டாவது காவிரி நீர் வந்தால்தான் ஓரளவுக்காவது தாக்குப்பிடிக்க முடியும். விவசாயத்திற்கு மட்டுமல்லாமல், குடிநீர் தேவையையும் சமாளிக்க முடியும் எனத் தமிழக மக்கள் பெரும் ஆதங்கத்தில் இருக்கிறார்கள். இதனால், மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாட்டில் உணர்ச்சிபூர்வமான போராட்டங்கள் வெடிக்கும் சூழல் உருவெடுத்துள்ளது. இந்நிலையில்தான் மாநிலம் தழுவிய கடையடைப்பு நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்டுள்ளார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா. அவர்கள் அளித்த பதில் விக்கிரமராஜாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

`காவிரி பிரச்னைக்காக ஆண்டுதோறும் கடையடைப்பு நடத்துகிறோம். ஆனால், எந்த பலனும் இல்லை. ஆனால், தமிழ்நாட்டு எம்.பி-க்கள் 39 பேரும் பதவி சுகத்தை அனுபவித்துக்கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள். தமிழ்நாட்டு எம்.பி-க்கள் அனைவரும் ராஜினாமா செய்தால் தான் நாங்கள் கடையடைப்பு நடத்துவோம். நீங்கள் எம்.பி-க்களை நேரில் சந்தித்துக் கோரிக்கை வைக்க வேண்டும். தற்பொழுது தமிழ்நாட்டு மக்கள் வாழ்வா ? சாவா ? என்ற நெருக்கடியில் உள்ளோம். அவர்கள் ராஜினாமா செய்துவிட்டால், ஒருநாள் மட்டுமல்ல, ஒரு வாரத்திற்கு கடைகளை அடைத்து வருமானம் இழக்க தயார்” எனக் கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்களும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்கள்.