வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (30/03/2018)

கடைசி தொடர்பு:23:00 (30/03/2018)

ஜெயலலிதாவைப் போல் பழனிசாமியும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க வேண்டும் - பெ.மணியரசன் யோசனை!

ஜெயலலிதாவைப் போல் பழனிசாமியும் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க வேண்டும் - பெ.மணியரசன் யோசனை!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, எடப்பாடி பழனிசாமி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும் எனக் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசிய பேரியக்க தலைவருமான பெ.மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.

மணியரசன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய பெ.மணியரசன் `காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய பாஜக அரசு மறுத்துவிட்டது. இதனால், தற்பொழுது தமிழ்நாட்டிற்கு மிகவும் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைத்து வரும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.

எதற்கெடுத்தாலும் இது அம்மா அரசு, அம்மா அரசு எனச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா சமாதியில் உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும். 1991- 96ம் ஆண்டு காலத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, காவிரி பிரச்னைக்காக காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். அப்போராட்டம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றது. அப்போதைய மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா சென்னைக்கு வந்து ஜெயலலிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்பொழுது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தால் தமிழ்நாடு முழுவதும எழுச்சிப் போராட்டங்கள் நடக்கும். இது இந்தியளவில் எதிரொலிக்கும். ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கிறார் என்றால் கண்டிப்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வரும்” என யோசனை தெரிவித்தார்.