போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணம்..! - நெல்லையில் பரபரப்பு

போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணம்..! - நெல்லையில் பரபரப்பு

நெல்லை மாவட்டத்தில் திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் காவல் நிலையத்தில் மர்ம மரணம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மர்ம மரணம்

நெல்லை மாவட்டம் கோடாரங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் முருகேசன். இவர் தற்போது குடும்பத்துடன் நெல்லையை அடுத்த தாழையூத்து பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருட்டு வழக்கு ஒன்றில் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகித்தனர். அது தொடர்பாக அவரிடம் விசாரணை செய்வதற்காக இன்று (30-ம் தேதி) மதியம் நெல்லை சிவந்திபட்டி காவல்நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். 

போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போது முருகேசனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது. அதனால், அவரை போலீஸார் அவருக்கு முதலுதவி செய்துள்ளனர். தொடர்ந்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சேர்த்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நடுவக்குறிச்சியைச் சேர்ந்த மாணிக்கராஜா என்பவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவத்தால் முருகேசனின் சொந்த ஊரான கோடாரங்குளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முருகேசனை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்ற போலீஸார், அவரை அடித்துக் கொன்று விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதனால் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்கள், மற்றும் அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் அனைவரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி  உள்ளனர். இந்தச் சம்பவத்தால் நெல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!