60 ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றிய அமெரிக்காவுக்கு ரஷ்யா பதிலடி!

60 ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றிய அமெரிக்காவுக்கு ரஷ்யா பதிலடி!

ரஷ்யா அதிபர் புதின்

மெரிக்காவில் உள்ள ரஷ்யாவின் தூதரக அதிகாரிகள் 60 பேரை உளவுத்துறை அதிகாரிகள் எனக் கூறிய அமெரிக்கா, சியாட்டில் உள்ள ரஷ்யத் தூதரகத்தை மூடவும் உத்தரவிட்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பணியாற்றிவரும் 60 அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற்ற ரஷ்ய அரசு முடிவெடுத்துள்ளது. 

சமீபத்தில்,  ``அமெரிக்காவில் உள்ள ரஷ்ய அதிகாரிகள் தங்கள் நாட்டின் தூதுவர்கள் என்ற போர்வையில் அமெரிக்க அரசை உளவு பார்க்கிறார்கள்'' என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்,  குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன், ரஷ்ய தூதரகத்தில் பணிபுரியும் 48 அதிகாரிகள் மற்றும் அமெரிக்காவுக்கான சிறப்புத் தூதரக அதிகாரிகளாக அனுப்பப்பட்ட 12 பேரையும் நாட்டிலிருந்து வெளியேற்றவும் அவர் உத்தரவிட்டிருந்தார். மேலும், ரஷ்ய தூதரக அதிகாரிகள் அனைவரும் அந்த நாட்டு உளவுத்துறையுடன் தொடர்பில் உள்ளார்கள். அவர்கள் குடும்பத்துடன் வெளியேற ஏழு நாள்கள் அவகாசம் வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பணியாற்றிவரும் 60 அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற்ற ரஷ்ய அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை மூடவும் ரஷ்ய அரசு முடிவெடுத்துள்ளதாக அந்த நாட்டின் வெளியுறவுத் துறை மந்திரி செர்ஜய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ``ரஷ்யாவின் இந்த நடவடிக்கை முற்றிலும் நியாயமற்றது'' என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

அதேபோல், ரஷ்யாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றிய செர்ஜய் ஸ்கிர்பால், கடந்த 4-ம் தேதி, இங்கிலாந்தில் உள்ள சாலிஸ்பரி நகரில், ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் விஷம் ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இது, ரஷ்யாவின் செயல்தான் என ஸ்திரமாகக் கூறிய இங்கிலாந்து, ரஷ்யாவின் 23 தூதரக அதிகாரிகளை உளவுத்துறையினர் என வெளியேற்றியது. பதிலுக்கு, ரஷ்யாவும் இங்கிலாந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. ஆனால், விஷத்தாக்குதலை ரஷ்யா மறுத்தது. ஆனால், இதன் எதிரொலியாக, பிரஸ்ஸல்ஸில் கடந்த வாரம் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் தலைவர்களின் மாநாட்டில் ஸ்க்ரிபால் தாக்கப்பட்டதற்கு ரஷ்யாதான் காரணம் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் உளவாளிகளுக்கு விஷம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தூதர்களுக்கு ரஷ்யா சம்மன் விடுத்துள்ளது. ரஷ்ய தூதர்கள் வெளியேற்றப்பட்டதற்கு எடுக்கப்பட்ட பதிலடி நடவடிக்கை தொடர்பாக விளக்கமளிப்பதற்காக ஐரோப்பிய யூனியன் தூதர்களுக்கு ரஷ்ய வெளியுறவுத் துறை சம்மன் விடுத்தது எனச் செய்தி வெளியாகியுள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, லாத்வியா, போலந்து, செக் குடியரசு மற்றும் ஐரோப்பிய யூனியனில் இடம்பெறாத நாடுகளுக்கும் சம்மன் விடுக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!