வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (31/03/2018)

கடைசி தொடர்பு:08:18 (31/03/2018)

நீதிபதி செல்லமேஸ்வர் எழுதிய கடிதத்துக்கு இந்திய வக்கீல்கள் சங்கம் கவலை! 

நீதிபதி செல்லமேஸ்வர் எழுதிய கடிதத்துக்கு இந்திய வக்கீல்கள் சங்கம் கவலை! 

செல்லமேஸ்வர்

``நீதித்துறையில் மத்திய அரசு தலையிடுகிறது'' எனத் தலைமை நீதிபதிக்கு ஜே.செல்லமேஸ்வர் எழுதிய கடிதத்துக்கு, இந்திய வக்கீல்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. 

உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவரான ஜே.செல்லமேஸ்வர், கடந்த இரு தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு ஆறு பக்க கடிதம் ஒன்றை எழுதினார். மேலும் அவர், அதன் நகல்களை உச்ச நீதிமன்ற இதர 22 நீதிபதிகளுக்கும்  அனுப்பிவைத்தார். அவர் எழுதிய கடிதத்தில், "கர்நாடக மாநிலத்தில் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நீதிபதியாகப் பணியாற்றும் கிருஷ்ணா பட்டை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் இரண்டு முறை சிபாரிசு செய்தும் அதை மத்திய அரசு ஏற்கவில்லை. மேலும், கிருஷ்ணா பட்டுக்கு எதிராக ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட ஒரு பிரச்னையை மீண்டும் விசாரிக்க மத்திய சட்ட அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது'' எனவும் அதில் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், ”நீதிபதிகள் நியமனம் குறித்த கொலிஜியத்தின் சிபாரிசுகள் மீது மத்திய அரசு முடிவு எடுப்பதில் தாமதம் செய்கிறது. நமது சிபாரிசுகளை ஏற்றுக்கொள்வது விதிவிலக்காகவும், கிடப்பில் போடுவது விதியாகவும் மாறிவிட்டது. 

இதனால் திறமையான நீதிபதிகள் நிராகரிக்கப்படுகிறார்கள். இந்த அனுபவம் மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. ஆகவே, நீதித்துறையில் மத்திய அரசின் தலையீடு பற்றி எல்லா நீதிபதிகளும் அடங்கிய ஒட்டுமொத்த கோர்ட்டையும் கூட்டி விவாதிக்க வேண்டும்'' என்று அதில் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இதுதொடர்பாக இந்திய வக்கீல்கள் சங்கம் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில், ”உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதம் மத்திய அரசு நீதித்துறை நியமனங்களில் தலையிடுவதை வெளிப்படுத்துகிறது. மேலும், நீதித்துறையின் சுதந்திரம் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதையும் அந்தக் கடிதம் மிகத் தெளிவாக உணர்த்தி உள்ளது'' என்று கவலை தெரிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க