``காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் துரோகத்தை மக்கள் மறக்கமாட்டார்கள்'' - வைகோ 

``காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் துரோகத்தை மக்கள் மறக்கமாட்டார்கள்'' - வைகோ 

மோடி, வைகோ

``காவிரி விவகாரத்தில், மத்திய அரசு செய்த துரோகத்தைத் தமிழக மக்கள் எந்நாளும் மறக்கமாட்டார்கள்'' என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார்கள். ம.தி.மு.க. பொதுச் செயலாளரான வைகோவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவிரி விவகாரத்தில் தமிழகத்தைப் பிரதமர் மோடி வஞ்சித்துவிட்டார். தமிழகத்தைச் சிதைக்க வேண்டும், கர்நாடகாவில் வெற்றிபெற வேண்டும் என்பதே அவருடைய திட்டமாக இருக்கிறது. அதுவே, காவிரி வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பிரதிபலிக்கிறது” என்று கருத்து தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து, அவர் தற்போது வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``நடுவர் மன்றம் தொடர்பாக நாடாளுமன்றம்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று மோடி அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதைத் தமிழக மக்கள் மறந்துவிடவில்லை. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டம் என்பதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழக முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கலாமா என்று விவாதிக்கப்பட்டதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. 

தமிழக அரசின் கவைக்கு உதவாத இதுபோன்ற நடவடிக்கைகள் ஒருபோதும் பயனளிக்கப்போவது இல்லை. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் காவிரிப் பிரச்னையை விசாரிக்கும் வழக்காக ஆக்குவது ஒன்றுதான் காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வழி ஏற்படும். நரேந்திர மோடி அரசு தமிழக மக்களுக்கு ஒருகாலும் காவிரிப் பிரச்னையில் நீதி வழங்காது என்பது திட்டவட்டமாக நிரூபணம் ஆகிவிட்டது. இந்தத் துரோகத்தைத் தமிழக மக்கள் எந்நாளும் மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள். காவிரியில் தமிழ்நாட்டின் மரபு உரிமையை நிலைநாட்டத் தமிழகமே திரண்டு போராட்டக் களத்தை அமைப்பது மட்டுமே மத்திய அரசுக்கு எச்சரிக்கை மணியாக அமையும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று அதில் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!