இளைஞரைப் பலிகொண்ட எடை குறைப்பு மருந்து! - லேகிய வியாபாரிக்குப் பதில் தைல வியாபாரியை அடித்துத் துவைத்த மக்கள் | People brutally attacked businessman

வெளியிடப்பட்ட நேரம்: 08:05 (31/03/2018)

கடைசி தொடர்பு:08:27 (31/03/2018)

இளைஞரைப் பலிகொண்ட எடை குறைப்பு மருந்து! - லேகிய வியாபாரிக்குப் பதில் தைல வியாபாரியை அடித்துத் துவைத்த மக்கள்

பிரதீப்

ஆவடி அருகே அயப்பாக்கத்தில் தைலம் வியாபாரியைத் தாக்கிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரதீப், தனது உடல் எடையைக் குறைக்க சாலையில் வாகனத்தில் விற்பனை செய்த லேகியத்தைக் கடந்த புதன்கிழமை (28.03.2018) வாங்கிச் சாப்பிட்டுள்ளார். லேகியம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். பின்னர், வீட்டின் பக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இரவு மீண்டும் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதீப், சிகிச்சை பலனின்றி மறுநாள் (29.03.2018) அதிகாலை உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள திருமுல்லைவாயில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட லேகியம் விற்றவர்களைப் பிடிக்க அம்பத்தூர் துணை ஆணையர் சர்வேஷ்ராஜ், ஆவடி உதவி ஆணையர் நந்தகுமார் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைப் பிடிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு லேகிய வியாபாரிகளை அயப்பாக்கத்தில் வசித்து வரும் மக்கள் அடித்து உதைத்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால், பிரதீப் சாவுக்குக் காரணமான லேகிய விற்பனையாளர்கள் அவர்கள் இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தைல வியாபாரியின் வாகனம்..

பொதுமக்கள் அடித்து உதைத்தது தைலம் வியாபாரி முலாயம் சிங் என்பவரைத்தான் என்று கூறப்படுகிறது. லேகிய வியாபாரி என்று எண்ணி தைலம் வியாபாரியை பொதுமக்கள் தாக்கியுள்ளனர். அவரின் வாகனத்திற்கும் பொதுமக்கள் தீயிட்டு எரித்தனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. தைல வியாபாரியைத் தாக்கிய 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க