வெளியிடப்பட்ட நேரம்: 11:17 (31/03/2018)

கடைசி தொடர்பு:12:00 (31/03/2018)

”இன்று ஹைட்ரோகார்பன்... நாளை நிலக்கரி...!” - காவிரிப் பிரச்னையின் பின்னணி விளக்கும் திருமுருகன் காந்தி #WeWantCMB

”இன்று ஹைட்ரோகார்பன்... நாளை நிலக்கரி...!” - காவிரிப் பிரச்னையின் பின்னணி விளக்கும் திருமுருகன் காந்தி #WeWantCMB

திருமுருகன் காந்தி

`காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்க உச்சநீதிமன்றம் கெடுவிதித்திருந்தது. அந்தக் கெடு 29-03-2018 அன்று முடிந்துவிட்டநிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எந்தவொரு முயற்சியும் மத்திய அரசு எடுக்கவில்லை. காவிரித் தண்ணீர்தான் தமிழகத்தின் விவசாயம் மற்றும் குடிநீருக்கான ஆதாயம். அப்படியிருக்கையில், மத்திய அரசு `காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்காதது என்பது திட்டமிட்டே தமிழகத்துக்குச் செய்த மாபெரும் துரோகம் ஆகும். இதனைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்தநிலையில், மத்திய அரசு காவிரி விவகாரத்தில் எடுக்கும் முடிவுகளின் பின்னணிகளை விவரிக்கிறார் மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி.

``கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் `நீதித்துறையையும், நாட்டையும் மக்கள்தான் காப்பாற்றவேண்டும்' எனப் பகிரங்கமாக அறிவித்தனர். எந்த அளவு உச்சநீதிமன்றம் மோசமாக இருந்தால், அதன் நீதிபதிகளே இப்படி ஒரு கருத்தைச் சொல்வார்கள். இப்படி இருக்கும் போது எப்படி நியாயமான தீர்ப்பு தமிழகத்துக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியும். 1924 ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கர்நாடகாவுக்கு 177 டி.எம்.சி தண்ணீரும், தமிழகத்துக்கு 490 டி.எம்.சி தண்ணீரும் என்றுதான் பிரிக்கப்பட்டிருந்தது. இது அப்படியே தற்போது தலைகீழாக மாறிவிட்டது. ஒப்பந்தம் போடப்பட்டபோது கொடுத்த அறிக்கையில் கர்நாடகாவில் காவிரி நீர் பாசன நிலம் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ஏக்கர். தமிழகத்தில் காவிரி நீர்ப் பாசன நிலம் 14.5 லட்சம் ஏக்கர். தற்போது தமிழகத்தில் 29 லட்சம் ஏக்கர் காவிரி நீர் பாசன நிலம் இருக்கிறது. அதில் சுமார் 5 லட்சம் ஏக்கருக்கு மேல் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கிறது. அதேநேரத்தில் கர்நாடகாவில் தற்போதைய பாசன நிலங்கள் 24 லட்சம் ஏக்கராக மாறிவிட்டது. கிருஷ்ணசாகர் அணையில் தண்ணீர் இல்லை. இருக்கும் தண்ணீர் எங்கள் விவசாயத்துக்கே சரியாக இருக்கிறது. பின்பு, நாங்கள் எப்படி தமிழகத்துக்குத் தண்ணீர் விட முடியும் என்று அவர்கள் பதில் சொல்லி வருகிறார்கள். ஆனால், கிருஷ்ணசாகர் அணைக்குத் தண்ணீர் வருவதற்கு முன்பாகவே ஐந்து அணைகளால் தண்ணீர் தடுக்கப்பட்டுவிடுகிறது. தற்போது அந்த அணைகளிலிருந்து ராட்சதப் பம்புகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்துக் காவிரியைச் சுற்றி இருக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளை நிரம்பச் செய்துவிடுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பாசனப்பரப்பு அதிகம் அதனால்தான் தண்ணீர் போதவில்லை என்று சொல்லிவிடுகிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம்

இந்தியாவிலேயே குடிநீர் விநியோகத்தை தனியார் மயமாக்கியது கர்நாடக அரசுதான். மைசூருக்குத் தண்ணீர் விநியோகம் செய்யும் உரிமத்தை டாடா(TATA)வுக்குக் கொடுத்துள்ளார்கள். இதற்கு எதிரான போராட்டமும் அங்கு வெடித்தது. அதேபோல பெங்களூருக்குத் தண்ணீர் விநியோகம் செய்யும் உரிமத்தைப் பன்னாட்டு நிறுவனத்திடம் கொடுப்பதற்கான முயற்சியும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. நன்றாகக் கவனித்தால், தெரியும்... ஏற்கெனவே 14 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக மாநிலக் குடிநீருக்காகப் பயன்படுத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. இந்த 14 டி.எம்.சி தண்ணீரும் குடிநீருக்காக கார்ப்பரேட்டிடம் செல்கிறது. கர்நாடக மாநிலத்தின் மொத்த நீராதாரம் 3,845 டி.எம்.சி. தமிழகத்தின் மொத்த நீராதாரம் 895 டி.எம்.சி. தமிழகத்தைவிட கர்நாடகா நான்கு மடங்கு நீர்வளம் கொண்டது. இதில் கர்நாடகாவில் உள்ள மொத்த அணைகளின் நீர் கொள்ளளவு சுமாராக 700 டி.எம்.சி. தமிழக அணைகளின் நீர் கொள்ளளவு 180 டி.எம்.சி. இதிலும்கூட மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் காவிரி மூலமாகத்தான் நமக்குக் கிடைக்கிறது. 

இந்த உரிமையை எப்படி நாம் விட்டுத்தர முடியும்? உச்ச நீதி மன்றத்தோட தீர்ப்பு கர்நாடகாவுக்கு நன்மைன்னு சொல்றது ஒருபக்கம் இருந்தாலும், முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுக்குத்தான் இது சாதகமானது. வருங்காலத்தில் பெரும்பான்மையான காவிரி நீரை கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குக் கொண்டு செல்வதற்கான முயற்சியைத்தான் மத்திய அரசு செய்கிறது. இது ஒருபுறமிருக்க... தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில், நிலக்கரியை எடுப்பதற்கான தீவிர முயற்சியும் நடந்துவருகிறது. நெய்வேலி லிக்னைட் காப்பரேஷன் நிறுவனம்தான் காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரியை எடுக்கப்போகிறது. ஏற்கெனவே காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டம் வேறு. இந்தத் திட்டங்களெல்லாம் நிறைவேற்றப்பட வேண்டுமானால், காவிரி டெல்டாவில் விவசாயம் நடைபெறக் கூடாது. இந்த விஷயத்தில் மத்திய அரசு உறுதியாகச் செயலாற்றிவருகிறது.

`ஒவ்வொரு தேசிய இனமக்களுக்கும் அந்த நாட்டின் மூல கனிமவளங்கள் மற்றும் நதிவளங்கள் மீது உரிமை உண்டு' என சர்வதேச சட்டம் உறுதி செய்துள்ளது. இதில் எந்த விதிமுறைகளையும் மீற முடியாது. ஆனால், அந்தத் தேசிய உரிமையைத் தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து இந்தியா மறுத்து வருகிறது!


டிரெண்டிங் @ விகடன்