``இது நாங்க சாமியா கும்புடுற மலை...!” - நியூட்ரினோக்குத் தரப்படும் அம்பரப்பர் மலை #WhyNeutrinoInTN | Do you know what is around the Amburber mountain?

வெளியிடப்பட்ட நேரம்: 14:26 (31/03/2018)

கடைசி தொடர்பு:14:26 (31/03/2018)

``இது நாங்க சாமியா கும்புடுற மலை...!” - நியூட்ரினோக்குத் தரப்படும் அம்பரப்பர் மலை #WhyNeutrinoInTN

 ``அம்பரப்பர் = அம் + அப்பன். அம் என்றால் அழகு. அப்பன் என்றால் சிவன். அம்பரப்பர் என்று சொல்லும் போது சிவன் நர்த்தனம் புரியும் இடம் என்று பொருள். இதில் அம்பரன் என்றால் கூத்தாடுபவன் என்றும் பொருள் படும்.

``இது நாங்க சாமியா கும்புடுற மலை...!” - நியூட்ரினோக்குத் தரப்படும் அம்பரப்பர் மலை #WhyNeutrinoInTN

1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு சமீபத்தில் தனது முழு அனுமதியை வழங்கியது மத்திய அரசு. கடந்த காலங்களில் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்ட மக்கள் போராட்டங்களின் விளைவாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஆய்வுக்கூடம் அமைக்கும் பணியானது இனி எந்தவித சுணக்கமும் இல்லாமல் தீவிரமடையும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ``எங்கள் பகுதிக்குள் நியூட்ரினோ திட்டம் கொண்டுவரக் கூடாது. மீறி பணிகள் நடத்த அரசு முயற்சி செய்தால், எந்த எல்லைக்கும் சென்று அப்பணிகளை நிறுத்தத் தயங்க மாட்டோம்.! '' என்று ஆவேசமாகக் கூறிவருகிறார்கள் அப்பகுதி மக்கள்.  ``சுற்றுச்சூழலுக்கு மாபெரும் கேடு விளைவிக்கும் நியூட்ரினோ திட்டத்தை ஒரு போதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.! ''  எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துவருகிறார்கள். நியூட்ரினோ திட்டமானது செயல்படுத்தவிருக்கும் தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரம் மலையான `அம்பரப்பர்' மலையை அப்பகுதி மக்கள் கடவுளாகப் பார்க்கின்றனர்.

நியூட்ரினோ

அம்பரப்பர் என்றால் என்ன?

``நாங்கள் சாமியா கும்பிடும் இந்த மலையைக் குடையப்போகிறேன் என்று சொல்கிறார்கள். எங்கள் சாமியைக் காவு கொடுத்துட்டு நாங்க எப்படி இங்கே வாழ முடியும்?'' எனக் கவலையோடு கூறும் அப்பகுதியைச் சேர்ந்த வயதான ஒருவர், மலைக்கும் தங்களுக்குமான உறவை விளக்கினார். ``அம்பரப்பர் = அம் + அப்பன். அம் என்றால் அழகு. அப்பன் என்றால் சிவன். அம்பரப்பர் என்று சொல்லும் போது சிவன் நர்த்தனம் புரியும் இடம் என்று பொருள். இதில் அம்பரன் என்றால் கூத்தாடுபவன் என்றும் பொருள் படும். இந்த மலையை நாங்கள் சிவனாக நினைத்து தினமும் வணங்குகிறோம்'' என்றார்.

அம்பரப்பர் மலையைச் சுற்றி என்னென்ன இருக்கிறது?

சுமார் 70 கிலோமீட்டருக்கு உள்ளாகவே முல்லைப்பெரியாறு அணை, வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை உள்பட மிக முக்கியமான 12 நீர்த்தேக்கங்கள் உள்ளன. வைகை ஆற்றின் பிறப்பிடமான மேகமலையைச் சுற்றிலும் சிறியதும் பெரியதுமாக ஐந்து அணைகள் உள்ளன. இவை அனைத்தும் தென் தமிழக மக்களின் நீர் ஆதாரங்கள். மேலும் அம்பரப்பர் மலை அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலையானது, யுனெஸ்கோ நிறுவனத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் இருக்கும் ஒன்று. இவை ஒருபுறம் என்றால், தம்பிரான் சோலை, பெரியாறு புலிகள் சரணாலயம், மேகமலை வனவிலங்கு சரணாலயம் எனப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிறைந்து காணப்படும் இடத்துக்கு நடுவில் அமைந்துள்ளது அம்பரப்பர் மலை. 600 க்கும் அதிகமான அரிய வகை மரங்கள், 30 க்கும் அதிகமான அரிய தாவர இனங்கள் உள்ள பகுதி. அதில் 16வகையான தாவர இனங்கள், உலகின் வேறெந்த பகுதிகளிலும் இல்லாதவை. மூன்று முகம் ருத்ராட்ச மரங்களானது உலகில் 20 மட்டுமே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதில், மூன்று இப்பகுதியில் உள்ளன.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூவைத்தான் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பெருங்கருங்குறிஞ்சி, பதினான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்கருங்குறிஞ்சி, அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் சிறுகருங்குறிஞ்சி போன்ற அரிய வகை தாவர இனங்களின் இருப்பிடம் இப்பகுதி. 

நியூட்ரினோ

இவ்வளவு சிறப்புவாய்ந்த மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பாறையைக் குடைய டன் கணக்கில் வெடி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்ற நிலைப்பாட்டில்தான் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நியூட்ரினோ திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். நீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்திவருகிறார்கள். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியைப் பெற்ற பின்னரே இத்திட்டம் செயல்படுத்த வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வாங்கிய தடையாணையும் இக்கருத்தையே முன் நிறுத்துகிறது. இதனாலேயே பூவுலகின் நண்பர்கள் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடுத்த வழக்கில், 2017 மார்ச் 20 ல் நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டது.! நியூட்ரினோ திட்டத்திற்கான முழு அனுமதியைக் கொடுத்த பின்னர், ஆட்சேபணை இருப்பின் 30 நாள்களுக்குள் பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என மத்திய அரசு கூறியிருப்பதால், அதற்கான வேலையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். விரைவில் சட்டப் போராட்டம் மூலமாகத் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.


டிரெண்டிங் @ விகடன்