அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பெயர் இன்று அறிவிப்பு!

இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பெயரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவிக்க உள்ளார். 

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பெயர் இன்று அறிவிப்பு!

ராஜ்பவனில் இன்று, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் வகையில், நேர்முகத்தேர்வை நடத்துகிறார், ஆளுநர். மாலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பெயரை அறிவிக்க உள்ளார். 

அண்ணா பல்கலைக்கழகம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை நிர்வகிக்க, மூன்று நபர் கொண்ட நிர்வாகக் குழு மட்டுமே செயல்பட்டுவருகிறது. இந்தக் குழுவின் தலைவராக உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவாலும், உறுப்பினர்களாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் விவேகானந்தனும், கிண்டி பொறியியல் கல்லூரியின் டீன் கீதாவும் உள்ளனர்.

துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்க மூன்று முறை தேடுதல் குழு நியமிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் தேடுதல் குழுவில் இருந்து ஒருவர் விலகிக்கொள்ளவே, புதிய துணைவேந்தரை நியமிக்க காலதாமதம் ஆனது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இரண்டு மாதங்களுக்கு முன்பு நீதிபதி சிர்புர்கர் தலைமையில் புதிய தேடுதல் குழுவை அறிவித்தார். இந்தக் குழுவில், மாநில அரசு சார்பில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுந்தரதேவனும், ஆட்சிக்குழு சார்பில் சென்னை ஐஐடி பேராசிரியர் ஞானமூர்த்தியும் நியமிக்கப்பட்டனர்.

இந்தக் குழு, துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த 170 விண்ணப்பங்களை அலசி ஆராய்ந்து, முதல்கட்டமாக 140 பேரின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. இறுதியில், ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்கள், கல்வி அனுபவத்தின் அடிப்படையில் 30 பேரின் பட்டியலைத் தயாரித்துள்ளனர்.

தேர்வுக் குழுவிடம் தமிழக அரசு, 'விண்ணப்பித்தவர்களின் பின்புலத்தையும் தீர விசாரித்து, அதன்பின்பே இறுதிப் பட்டியல் வெளியிட வேண்டும்' என்றும், 'துணைவேந்தர் நியமனத்தில் எந்த விதமான சர்ச்சையும் ஏற்படக் கூடாது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்' என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனடிப்படையில், தேர்வுக்குழு 30 பேர் கொண்ட பட்டியலில் உள்ளவர்களில், நிர்வாகத்திறன் மற்றும் சாதனைகளின் அடிப்படையில் மீண்டும் பட்டியலைத் தயாரித்துள்ளது. இதிலிருந்து ஆறு பேரைத் தேர்வு செய்துள்ளனர். இதில் நான்கு பேர், அண்ணா பல்கலைக்கழகத்தையும், ஒருவர் சென்னை ஐஐடி-யிலும், மற்றொருவர் பெங்களூருவில் உள்ள ஐஐஎஸ்சி-யில் இருந்தும் தேர்வாகி இருக்கின்றனர். இந்த ஆறு பேரும், இன்று (31.03.2018) ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள உள்ளனர்.

நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்களிடம் நீதிபதி சிர்புர்கர் முதலில் பேச உள்ளார். இவர், நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்களிடம்,  `அண்ணா பல்கலைக்கழகத்தை மேம்படுத்த என்னென்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்' என்றும்,  `நிதிநிலையை எவ்வாறு அதிகப்படுத்துவீர்கள்?' என்ற கேள்விக்கான பதிலைப் பொறுத்தே, மூன்று பெயர் கொண்ட பட்டியலை ஆளுநரிடம் வழங்குவார்.

இன்றே தேர்வுக்குழு பரிந்துரைசெய்து, மூன்று பேரையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்துப் பேச உள்ளார். அதன்பின்பு, மூன்று பேரில் ஒருவரைத் துணைவேந்தராக அறிவிக்க உள்ளார். பெயர் அறிவிக்கப்பட்டவுடன்,  `புதிய துணைவேந்தரை அழைத்துவர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக' அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!