`தமிழகத்தை ஆளும் தகுதியை அ.தி.மு.க இழந்துவிட்டது' - கே.பாலகிருஷ்ணன் காட்டம்! #WeWantCMB

''காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, தமிழகத்திற்கு பச்சைத் துரோகத்தை இழைத்துள்ளது'' என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கே பாலகிருஷ்ணன் 

உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு இழுத்தடித்துவருகிறது. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் காவிரிக்கான போராட்டத்தை தமிழகக் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. அந்தவகையில், கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் மற்றும் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த தி.மு.க முடிவுசெய்துள்ளது. இதனால், மத்திய அரசுக்கு எதிரான கண்டனங்கள் தமிழகத்தில் வலுக்கத்தொடங்கியுள்ளன. இந்நிலையில், மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர், கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  ``காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் அளித்த 6 வார காலத்தைக் கடத்திய பின்னர், தற்போது மீண்டும் மூன்று மாத கால அவகாசம் கேட்டு, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 

உண்மையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு 24 மணி நேர அவகாசமே போதுமானது. ஆனால், 6 வார காலம் இப்பணியை முடக்கிவிட்டு, இப்போது மேலும் அவகாசம் கோருவது இப்பிரச்னையைக் கிடப்பில் போட்டு, தமிழகத்தை வஞ்சிக்கும் உள்நோக்கம் கொண்டது. இதற்கு எதிராக, தமிழக அரசு மனுதாக்கல் செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க மறுப்பது இது முதல்முறையல்ல. கடந்த 2016-ம் ஆண்டே மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அதை ஏற்க மறுத்து நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்மனு தாக்கல் செய்ததை நாடே அறியும். எனவே, மீண்டும் அவகாசம் கேட்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனப்படுத்தும் உள்நோக்கம்கொண்டது. 

அனைத்துக்கட்சித் தீர்மானம், தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என எதற்கும் மத்திய அரசு அணு அளவும்கூட அசைந்துகொடுக்கவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமலாக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், மத்திய அரசு தமிழகத்திற்கு பச்சைத் துரோகத்தை இழைத்துள்ளது. இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள்குறித்து அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசிக்காமல்,  தன்னிச்சையாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது, அ.தி.மு.க சார்பில் அன்று உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளது. தன்னிச்சையாக அ.தி.மு.க போராட்டங்களை அறிவித்திருப்பது, மத்திய அரசுக்கு மறைமுகமாகச் சேவகம்செய்யும் உள்நோக்கம் கொண்டதாகும். தமிழக மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்துவரும் மத்திய அரசுக்குத் துணைபோவதாகவே அ.தி.மு.க-வின் செயல் அமைந்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தை ஆளும் தகுதியை அ.தி.மு.க இழந்துவிட்டது" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!