வெளியிடப்பட்ட நேரம்: 17:37 (31/03/2018)

கடைசி தொடர்பு:18:43 (31/03/2018)

`ரயில் நிலையம் பிரசார மேடையல்ல..!' - கமல்மீது ரயில்வே நிர்வாகத்திடம் புகார்

`ரயில் நிலையம் பிரசார மேடையல்ல..!' - கமல்மீது ரயில்வே நிர்வாகத்திடம் புகார்

ரயில் நிலையங்களில் மக்களுக்கு இடையூறாக அரசியல் பரப்புரையில் கமல்ஹாசன் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தென்னிந்திய ரயில்வேயிடம் சிலர் மனு அளித்துள்ளனர். 

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநாடு திருச்சியில் வரும் ஏப்ரல் 4-ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்னையிலிருந்து, திருச்சிக்கு கமல்ஹாசன், வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் 3-ம் தேதி பயணிக்கிறார். இந்தப் பயணத்தின்போது இடையில் உள்ள ரயில் நிலையங்களில் அவர் தொண்டர்களைச் சந்திக்க இருப்பதாகவும் இதனால் பொதுமக்கள் அவதிப்படுவர் என்றும் கூறி தென்னக ரயில்வே மேலாளரிடம் சிலர் மனு அளித்துள்ளனர். 

அதில், "திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்குச் செல்லும் வழியில் இடையில் உள்ள ரயில் நிலையங்களில் அவர் தொண்டர்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார். எழும்பூரிலிருந்து திருச்சி வரை 9 ரயில் நிலையங்களில் அவர் தொண்டர்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இது பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில் அமையும். நடிகர் ஷாருக்கான் இதற்கு முன்னர் இவ்வாறு ரயிலில் பயணம் செய்யும்போது இரண்டு உயிர்கள் பலியானது நினைவில் கொள்ள வேண்டும். எனவே, பொதுமக்கள் பயணிக்கும் ரயிலை அரசியல் மேடையாகப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது" என மனு அளிக்கப்பட்டுள்ளது. 

கமலுக்கு எதிராக ரயில்வே நிர்வாகத்திடம் மனு

இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள புகார்தாரர்களில் ஒருவரும் பத்திரிகையாளருமான சாவித்ரி கண்ணன், ``நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் ரயில் சந்திப்புக்குத் தன் ரசிகர்களை அழைத்துள்ளார். ஏப்ரல் 3-ம் தேதி எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இந்த நேரத்துக்குப் புறப்படுகிறேன். ரயில் ஒவ்வொரு ரயில் நிலையத்துக்கும் இந்த இந்த நேரத்துக்கு வருகிறது எனத் துல்லியமாக நேரம் குறித்து பத்திரிகைகளில் அழைப்பு விடுத்துள்ளார். இதைவிட பொது நலத்துக்கு குந்தகமாக ஏதேனும் செய்ய முடியுமா. இதை முதன்முதலாக மூத்த பத்திரிகையாளர் திருஞானம்தான் கவனப்படுத்தினார்.

தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் கவனத்துக்கு இன்று இதை பத்திரிகையாளர்களாகிய நானும் (சாவித்திரி கண்ணன்), ஜாபர் அலியும், சமூக ஆர்வலர் கிருஷ்ண மூர்த்தியும் கொண்டு சென்றோம். தென்னக ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி தனஞ்செயனை நேரில் சந்தித்தும் ஒரு மனு கொடுத்தோம். கமல்ஹாசன் அனைவரையும்போல ரயிலில் பயணிக்கக் கூடாது என நாம் கூறவில்லை. ஆனால், பயணிக்கும் ரயிலை ஒரு பொதுமேடையாகவும் ரயில்வே பிளாட்பாரத்தை அரசியல் பிரசார மைதானமாகவும் பயன்படுத்த அவரை அனுமதிக்கப் போகிறார்களா. என்பதே கேள்வி. இதனால் ஏற்படும் பெரும் கூட்டநெரிசலில் ரயிலில் ஏற முடியாமல் தவறவிடப் போகிறவர்கள் எத்தனை பேரோ காலதாமதப்படும் ரயில்கள் எத்தனையோ. நடிகர் ஷாருக்கான் இது போன்று ஒரு ரயில் சந்திப்பு செய்தபோது இரு உயிர்கள் பலியானதைப் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டாமா. ரயில்வே என்ன செய்யப் போகிறது. பார்ப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க