`மெரினாவில் போராடிய இளைஞர்கள் கைதாகி விடுதலை!’ - தடை உத்தரவு பிறப்பித்த போலீஸ் #WeWantCMB

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தடையைமீறி மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தை அடுத்து மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

மெரினா போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தடையைமீறி இளைஞர்கள், குடும்பத்துடன் கூடி சென்னை மெரினா கடற்கரையில் மாலை 5 மணி அளவில் போராட்டம் நடத்தத் தொடங்கினர். காவிரி உரிமைக்காகவும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்திய அரசுக்கு எதிராக `அமைத்திடு அமைத்திடு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு வேளாண் நிலங்களைக் காத்திடு, பிச்சை கேட்கவில்லை உரிமையைத்தான் கேட்கிறோம், வாரியம் இல்லையா வரியும் இல்லை’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர்.

இதையடுத்து, மெரினாவுக்கு விரைந்த போலீஸார் போராட்டம் நடத்திய 4 பெண்கள் உட்பட 15 இளைஞர்களைக் கைதுசெய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய இணை ஆணையர் அன்பு, `போராட்டம் செய்வதற்கு நிறைய இடங்கள் உள்ளன. சென்னை மெரினா கடற்கரையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் சட்டத்துக்கு உட்பட்டு போராட்டத்தை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்’ என்றார். மேலும், சென்னை மெரினாவில் போலீஸ் சட்டப் பிரிவு 41 ஏ-யின்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!