வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (31/03/2018)

கடைசி தொடர்பு:20:20 (31/03/2018)

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக முத்தரசன் மீண்டும் தேர்வு!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெறும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் ஆர்.முத்தரசன் மீண்டும் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முத்தரசன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு விதிகள்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சியின் மாநாடுகள் நடத்தப்படும். அந்த மாநாட்டில் மாநிலச் செயலாளர் தேர்வு நடைபெறும். அதன்படி தமிழ்நாடு மாநிலக்குழுவின் 24வது மாநில மாநாடு மன்னார்குடியில் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. இன்று இந்த மாநாட்டில் தேசிய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர்கள் டி.ராஜா, கே.நாராயணா, நாகேந்திர நாத் ஓசா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்கள் ஆர்.நல்லகண்ணு, தா.பாண்டியன்  மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் புதிய மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய மாநிலச் செயலாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. விவாதிக்கப்பட்டதில் மாநிலச் செயலாளராக முத்தரசனை மீண்டும் தேர்வு செய்ய மாநிலக்குழு முடிவு செய்தது. மாநிலக்குழுவின் இந்த முடிவை கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி இன்று (31.3.2018) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.