கூட்டுறவு சங்கத் தேர்தல் மனுத்தாக்கலின்போது அ.தி.மு.க நிர்வாகி மண்டை உடைப்பு!

கூட்டுறவு சங்கத் தேர்தல் மனுத்தாக்கல் தொடர்பாக அ.தி.மு.க-வினருக்கும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், அ.தி.மு.க மாவட்ட நிர்வாகி மண்டை உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக அ.ம.மு.க நிர்வாகி உட்பட 5 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

அ.தி.மு.க நிர்வாகிகள் மீது தாக்குதல்

கூட்டுறவு சங்கத் தேர்தலில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வினர் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி விட வேண்டும் என்கிற முனைப்புடன் களம் இறங்கி செயல்பட்டு வருகின்றனர். எற்கெனவே பொறுப்புக்களில் இருந்தவர்கள், தங்களுடைய ஆதரவாளர்கள் அனேகரை கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்களாகச் சேர்த்து வைத்து இருப்பதால், தேர்தல் நடத்தப்பட்டாலும் அவர்களுக்கே வெற்றி கிடைக்கும் என்பதே தற்போதைய நிலை. அதனால், இந்தத் தேர்தல் குறித்து தி.மு.க-வினர் அதிக அக்கறை காட்டவில்லை. 

அதேசமயம், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த பலர், கூட்டுறவு சங்கங்களில் பொறுப்புகளை ஏற்கெனவே வகித்ததால், மீண்டும் அதே பொறுப்புக்கு வந்துவிடத் துடிக்கிறார்கள். ஆனால், ஆளுங்கட்சியினர் அவர்களுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து வருகிறார்கள். அதனால், இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை நிலவுகிறது. இந்தநிலையில், நெல்லை மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள நகர கூட்டுறவு வங்கிக்கான தேர்தலில் அ.தி.மு.க பகுதிச் செயலாளரான தச்சை மாதன் உள்ளிட்ட 11 உறுப்பினர்கள் மனுத்தாக்கல் செய்தனர். 

முன்னாள் துணை மேயரும் டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்தவருமான கணேசன் தரப்பினரும் அங்கு மனுத்தாக்கல் செய்தனர். அதனால் இரு தரப்பினருக்கும் இடையே மன வருத்தம் ஏற்பட்டது. இந்தநிலையில், பாளையங்கோட்டை நிலவள வங்கி மனுத்தாக்கல் செய்த இடத்துக்குச் சென்ற தினகரன் ஆதரவாளர்கள், அ.தி.மு.க நிர்வாகிகளான தச்சை மாதவன், பரணி சங்கரலிங்கம் ஆகியோரைத் தாக்கினார்கள். இதில், மாநகர மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவரான பரணி சங்கரலிங்கத்தின் மண்டை உடைந்தது. தச்சை மாதவன் கார் உடைக்கப்பட்டது. 

அ.தி.மு.க நிர்வாகிகள்

தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்குமாறு அ.தி.மு.க-வினர் பாளையங்கோட்டை காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளரான பாப்புலர் முத்தையா, முன்னாள் துணை மேயர் கணேசன், இசக்கிப்பாண்டியன் உள்ளிட்ட 5 பேர்மீது காவல்துறையினர் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் நெல்லை மாவட்ட அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!