வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (31/03/2018)

கடைசி தொடர்பு:21:10 (31/03/2018)

`காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் விவகாரங்களுக்காகப் போராட்டம்!’ - நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரியும் மக்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் போராட்டம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைய மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நடிகர் சங்கம் போராட்டம் நடத்த இருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

நடிகர் சங்க நிர்வாகிகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று மத்திய அரசையும் தமிழக அரசையும் வலியுறுத்தி தமிழ்நாடு முழுதும் போராட்டம் வலுபெற்றுவருகிறது. கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலர் போராடிவருகின்றனர். 

இந்நிலையில் இன்று சென்னையில், நடிகர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பொன்வண்ணன்,"தமிழகம் முழுதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. மத்திய அரசை வலியுறுத்தி, மக்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் சார்பில் அடுத்த வாரம் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அந்தப் போராட்டத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் உட்பட அனைத்து நடிகர்களும் கலந்துகொள்வார்கள். அது, என்ன மாதிரி போராட்டம் என்பது விரைவில் அறிவிக்கப்படும். தற்போது உள்ள சினிமா பிரச்னைகுறித்து தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் முடிவுகளுக்கும், அவர்களின் கோரிக்கைகளுக்கும் நான் உடன்படுகிறேன். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார். இதில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.