ஆசிரியர் தந்த நெருக்கடியால் மாணவன் தற்கொலை -உறவினர்கள் சாலை மறியல்!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தை சேர்ந்தவர்கள் ஆனந்தக்குமார்-சுபலக்ஷ்மி தம்பதியினர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோவிலுக்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. வீட்டில் தனது மகன் ஜெகதீஷ்(18வயது) பிணமாகக் கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். ஜெகதீஷ் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி ஜ.டி துறையில் முதலாமாண்டு மாணவர் ஆவர். உடலின் அருகே ஜெகதீஷ்-ன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று இருந்துள்ளது. அக்கடிதத்தில், "துறைத்தலைவர் ராமராஜ் தான் எனது தற்கொலை முடிவுக்கு முழு காரணம். அவரால் நான் ஆழ்ந்த மன அழுத்தத்தில் உள்ளேன்" எனக் குறிப்பிடப்பட்டு இருந்தார்.

தற்கொலை கடிதம்

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் மூக்கன் தலைமையிலான ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து, உறவினர்களைச் சமரசம் செய்துவிட்டு, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை செய்த மாணவர்
 

ஜெகதீஷ்-ன் தற்கொலை குறித்து அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களிடம் விசாரித்ததில், "சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் இரு மாணவ குழுக்களுக்கு இடையே சண்டை நடந்துள்ளது. அதில் ஒரு குழுவில் ஜெகதீஷ்-ம் இருந்துள்ளான். இதனால் கல்லூரி நிர்வாகம் ஜெகதீஷை ஒரு வாரக்  காலம் இடை நீக்கம் செய்து தண்டனை அளித்தது. ஒரு வாரம் இடைநீக்கம் முடிந்து மீண்டும் கல்லூரிக்கு வந்த ஜெகதீஷை கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்குள் அனுமதித்தாலும், துறைத்தலைவர் ராமராஜ் அனுமதிக்க மறுத்துவிட்டார். தகாத வார்த்தைகளால் பேசி மனம் நோகும்படி செய்து மற்ற மாணவர்கள் முன் அவமானப்படுத்தியுள்ளார். மேலும் ஜெகதீஷின் பெற்றோரையும் கல்லூரிக்கு அழைத்து வரச்  சொல்லி அவர்களையும் அவமானப் படுத்தியுள்ளார். ஜெகதீஷின் பெற்றோர், ராமராஜின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளனர். அதைப் பொருட்படுத்தாது அசிங்கப்படுத்தியுள்ளார். இதனால் மனம் உடைந்த ஜெகதீஷ் தற்கொலை செய்துகொண்டான்" எனத் தெரிவித்தனர்.

மாணவர்கள், தற்கொலை எண்ணங்கள் மற்றும் மன உளைச்சல்களில் இருந்து விடுபட ஒவ்வொரு கல்வி நிறுவனங்களிலும் கவுன்சிலிங் கமிட்டி அமைக்க வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக இருந்தாலும், இது போன்று  ஒழுங்கை கடைபிடிப்பதாக நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் தரும் நெருக்கடியால் தொடர்ந்து நேரும் சம்பவங்களுக்கு தீர்வு என்ன என மாணவர்கள் கேள்வி எழுப்பினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!