ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி நிறுத்தப்பட்டால் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் பாதிக்கப்படுமா ?

துாத்துக்குடியில் இயங்கி வரும்  ஸ்டெர்லைட் ஆலையின் காப்பர் உற்பத்தி நிறுத்தப்பட்டால், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு கையாளும் திறன் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலை மூடுவது துறைமுகத்துக்கு ஆபத்தா?

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடந்த 2017-18ம் ஆண்டில்,  36.5 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது, கடந்த 2016 – 17 நிதியாண்டை விட 1.9 மில்லியன் டன் அளவு குறைவாகும். இதற்கு துாத்துக்குடியில் இயங்கி வரும் தனியார் மற்றும் அரசு அனல் மின்நிலையங்களில் உற்பத்தி திறன் குறைந்ததுதான் காரணம் என துாத்துக்குடியில் துவக்கப்பட்டுள்ள ‛டிரக் டெர்மினல்’ பகுதியில் உள்ள வசதிகள்  பற்றிய விளக்கக்கூட்டத்தில் துறைமுக பொறுப்புக் கழக போக்குவரத்து மேலாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

மேலும், கடந்த  நிதியாண்டை விட, நேற்றோடு (31.03.18) முடிவடைந்த நிதியாண்டில், நிலக்கரியின் இறக்குமதி 1.8 மில்லியன் டன் குறைந்துள்ளது. மின் நிலையங்களில் மின் உற்பத்தி உற்பத்தி குறைந்ததோடு, ஜி.எஸ்.டி.,யின் அறிமுகமும் இதற்கு  முக்கியக் காரணம் என்றார். இந்நிலையில், துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வருக் மக்கள் போராட்டத்தால் இந்த ஆண்டும் சரக்கு கையாளும் அளவு பாதிக்கப்படலாம் என துறைமுக அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். 

அவர்களிடம் பேசினோம்,  “வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் மூலம் ஸ்டெர்லைட் ஆலை மட்டும் ஆண்டுக்கு 1.3 மில்லியன் டன் தாமிரத் தாதுக்களை இறக்குமதி செய்கிறது. அதே போல், 1.2 மில்லியன் டன் ராக் பாஸ்பேட்டையும் இறக்குமதி செய்கிறது.  இந்த ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டம் காரணமாக  இதன் உற்பத்தி பாதிக்கப்பட்டால்,  துறைமுகத்தின் சரக்கு கையாளும் அளவில் சுமார் 2.5 மில்லியன் டன் அளவுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.  ’சாகர்மாலா’ துறைமுக விரிவாக்கம் என வளர்ச்சி திட்டங்களுடன் இயங்கி வரும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் வளர்ச்சியில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது” என்றனர். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!