வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (01/04/2018)

கடைசி தொடர்பு:05:30 (01/04/2018)

200 நெல்மூட்டைகள் எரிந்து நாசம்; தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை!

அன்னவாசல் அருகே பாறையின் மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த 20 க்கும் மேற்பட்ட வைக்கோல் போர் எரிந்தது

அன்னவாசல் அருகே பாறையின் மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த 20 -க்கும் மேற்பட்ட வைக்கோல் போர் எரிந்தது. அருகில் இருந்த 200 க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளுக்குத் தீ பரவியதால் அவையும் எரிந்து சாம்பலாயின. ஊர் மக்களும் தீயணைப்புத்துறை வீரர்களும் ஒன்று திரண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


நெல்மூட்டை -தீ விபத்து


புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகில் உள்ளது கூத்தினிப்பட்டி என்ற கிராமம். இங்குள்ள விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான நிலங்களில் விளைந்த நெல்லை அறுவடை செய்து, வயல்கள் நடுவில் இருந்த பாறை மீது அடுக்கி வைத்திருந்தனர். பத்து விவசாயிகள் ஒன்று சேர்ந்து தங்களது நெல்மூட்டைகளை தனித்தனியாக, வரிசையாக அடுக்கி வைத்திருந்தனர். நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து அதன்மேல் வைக்கோல் கட்டுகளை பரப்பி நெல்மூட்டைகள் வெளியில் தெரியாதவாறு வைத்திருந்தனர். பார்ப்பதுக்கு வைக்கோல் போர் போலவே தெரியும். இந்த அடுக்கு வரிசைகளில் நேற்று (31.03.2018) இரவு பத்து மணிக்கு மேல் தீ பற்றி எரிந்தது. குறிப்பிட்ட நெல்மூட்டை அடுக்குகளைத் தேர்ந்தெடுத்து  மர்ம நபர்கள் சிலர் தீவைத்து விட்டு ஓடியதாக கூத்தினிப்பட்டி கிராம மக்கள் கூறுகிறார்கள். இதுபற்றி ஊர்மக்கள் கூறும்போது,' அறுவடை முடிந்துள்ள நிலையில் விவசாயிகள் தங்கராசு, அன்பு, பழனியம்மாள், சுப்பையா உள்ளிட்ட விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைந்த நெல் மூட்டைகளை எங்கள் கிராமத்தில் உள்ள பாறையில் வைக்கோல் போர் அமைத்து அதனுள் சேமித்து நெல்மூட்டை -தீ விபத்துவைத்துள்ளனர். 20 -க்கும் மேற்பட்ட வைக்கோல் போர்கள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டிருந்து. இன்று (நேற்று) இரவு அவைகள் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கின.

இதனைப் பார்த்த நாங்கள்  உடனே தீயணைப்பு துறையினருக்குத் தகவல் கொடுத்தோம். அவர்கள் வரும்வரை காத்திருக்காமல் நாங்களும் தீயை அணைக்க முயற்சித்தோம். தண்ணீர் இல்லாததால் தடுமாறிப் போனோம். அதற்குள் இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். நாங்களும் அவர்களுக்கு உதவினோம்.  தீயை முழுமையாக அணைப்பதற்குள் 8 வைக்கோல் போர்கள் முற்றிலும் எரிந்ததுவிட்டது. அதனுள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 200 -க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகளும் எரிந்து சாம்பலாகிவிட்டது. இந்த தீ விபத்தில் ரூ 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துவிட்டது. அங்கு  மர்ம நபர்கள் சிலர்தான் வைக்கோல் போருக்கு தீ வைத்துள்ளனர்" என்றார்கள். இதற்குள் அங்கு வந்த போலீசாரிடமும் அந்த மர்ம  நபர்களைக் கைது செய்யும்படி வலியுறுத்தினர். இது குறித்து விவசாயிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்துக்குக் காரணமாக சொல்லப்படும் மர்ம நபர்கள் பற்றி விசாரணை செய்து வருகின்றனர் .