வெளியிடப்பட்ட நேரம்: 10:58 (01/04/2018)

கடைசி தொடர்பு:11:13 (01/04/2018)

'ஸ்டெர்லைட்டுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய தருணம் இது' - தூத்துக்குடி கிளம்பிய கமல்!

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கொடுக்கப்பட்ட காலவரை இன்றுடன் முடிவடைகிறது. அதனால், அழுத்தம் கொடுக்க வேண்டிய தருணம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.     

கமல்ஹாசன்

ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது. தற்போது செயல்பட்டு வரும் ஆலையை மூட வேண்டும் என்பது குமரெட்டியாபுரம் கிராம மக்களின் கோரிக்கை. தங்களது கிராமத்தில் வேப்பமரத்தடியில் நடத்தி வரும் இப்போராட்டம் 48 வது நாளாக நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் இக்கிராம மக்களை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் மக்களுடன், போராட்டத்தில் கலந்துகொள்ள தூத்துக்குடி செல்லும் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன்,  காவிரி மேலாண்மை விவகாரத்திற்காக இளைஞர்கள்  போராட்டம் நடத்துவது ஒரு நல்ல மாற்றம். அவர்கள் மாற்றத்தை நோக்கிச் செல்வது, அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்பதில் நம்பிக்கை இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கொடுக்கப்பட்ட கால வரை இன்றுடன் முடிகிறது.  அழுத்தம் கொடுக்க வேண்டிய தருணம்.  காவிரி விவகாரத்திற்காகத் தேவைப்பட்டால் மக்கள் நீதி மையம் போராட்டம் நடத்தத் தயாராக உள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்துவது குறித்து ஏப்ரல் 4-ல் திருச்சியில் நடக்கும் கூட்டத்தில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.