`இது மக்களின் உயிரைக் காக்கும் போராட்டம்' - குமரெட்டியாபுரம் மக்களை சந்தித்த என்.ஆர்.தனபாலன்   

``ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால் தூத்துக்குடி சுடுகாடாக மாறிவிடும். இனியும் தாமதிக்காமல் உடனடியாக இந்த ஆலையை மூடிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தித் தொடர்ந்து 49-வது நாளாகப் போராட்டம் நடத்தி வரும் குமரெட்டியாபுரம் கிராம மக்களை என்.ஆர்.தனபாலன் நேரில் சந்தித்து  பேசினார். பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ``உரிமைகளைக் காக்கும் போராட்டம் அல்ல இது. உயிரைக் காக்கும், எதிர்கால சந்ததிகளைக் காக்கும் போராட்டம்.  ஒட்டு மொத்த தூத்துக்குடி மக்களுக்கான ஒரு கிராம மக்களின் போராட்டமாக பார்க்க வேண்டும். தளராமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

இது மட்டுமல்ல காவிரிப் பிரச்சினை, நியூட்ரினோ, மீத்தேன் என தமிழக முழுவதும் போராட்டக்களமாகவே காட்சியளிக்கிறது. மகாராஷ்டிரா, குஜராத், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து விரட்டப்பட்ட தொழிற்சாலைகளை கேட்பாரற்ற தமிழகத்தில் துவக்க அனுமதி அளித்துள்ளது இந்த அரசு. இதனால் 1 கோடி மக்கள் தண்ணீருக்காக தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நலனைப் பற்றி சிறிதும் கவலைப்படாத அரசு இது. 

மத்திய அரசுக்கு அடிபணிந்து போகிறது நமது மாநில அரசு. ஒட்டு மொத்த இந்தியாவையும் தமது கட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறது. பா.ஜ.க. மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய உள்ளது. இந்த ஆலையைச் சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர், மண் மாதிரியை ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம் என சமாளிப்புக்காக அமைச்சர்கள் பேசி வராமல், இந்த ஆலையை உடனடியாக மூடிட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!