`விமான பணிப்பெண்களின் ஆடைகளை களைந்து சோதனையா?' - சர்ச்சை ஏற்படுத்தும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ்

ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமான பணிப்பெண்களிடம் ஆடைகளைக் களைத்து சோதனையில் ஈடுபட்டதாக, அந்நிறுவனத்தின் மேல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ்


சென்னை, விமான நிலையத்தில், நேற்று இரவு ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸில் இருந்து இறங்கிய பணிப்பெண்களிடம் ஆடைகளைக் களைத்து மனிதத்தன்மையற்ற சோதனையில் ஈடுபட்டதாகப் பணிப்பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  2 ஆண்கள் உட்பட 4-5 பெண்களையும் சோதனை செய்யும் அறைக்குள் அழைத்துச் சென்று அவர்களிடம் சோதனை நடத்தி உள்ளனர்.

விமானத்தில் உணவுப் பொருள் மற்றும் பிற பொருட்களை விற்றுச் சேகரித்த பணத்தை நிறுவனத்திடம் தராமல் ஏமாற்றுவதாகச் சந்தேகம் எழுந்ததை அடுத்து இந்தச்  சோதனை நடைபெற்றுள்ளது . அப்போது, பணிப்பெண்களைக் குற்றவாளிகள்போல் நடத்தியதாகவும், அவர்களின் கைப்பைகளை சோதனை செய்தபின், ஆடைகளைக் களைத்து சோதனையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான பணிப்பெண்கள் ஆவேசமாகக் குரல் எழுப்பும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், சோதனைக்கு ஆளான பணிப்பெண்கள் எங்கள் விமான சேவை நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார்கள். சிறந்த சேவையை செய்துவரும் அவர்களிடம் ஆடைகளைக்  களைந்து சோதனை நடத்தவில்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும், மார்ச், 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில், இரவில் சில விமான நிலையங்களில் பணிப்பெண்கள் சிலரிடம் சாதாரண சோதனை நடத்தப்பட்டது. ஆனால், ஆடைகளைக் களையச் சொல்லி சோதனை நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!