சதுரகிரி வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீ...!

சதுரகிரி வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீ...!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள சதுரகிரி வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியுள்ளது.

காட்டுத்தீ

சமீபத்தில் ஏற்பட்ட குரங்கணி காட்டுத்தீ விபத்தில் இதுவரை 22 பேர் மரணமடைந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளக்கியது. அதைத்தொடர்ந்து அடர்ந்த வனப்பகுதிகளுக்குச் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் வனத்துறை மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம் வத்ராப் அருகே அமைந்திருக்கும் சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்லப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே,  நேற்று இரவு சதுரகிரி மலையில் திடீரென காட்டுத்தீ  பரவியுள்ளது.  இரவு முழுவதும் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. 

நேற்று இரவு மலைப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான இடி, மின்னலால் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் நிலையில், இந்தத் தகவல் தெரிந்து வனத்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் தீயை அணைத்து வருகிறார்கள். இதனால் சதுரகிரி சுந்தரமகாலிங்க கோயிலுக்குச் செல்ல வந்த பக்தர்களை மலை ஏற அனுமதிக்கவில்லை. மாற்றுப் பாதையில் செல்லவும் வனத்துறை அனுமதிக்கவில்லை. காட்டுத்தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்புதான் கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!