வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (01/04/2018)

கடைசி தொடர்பு:14:19 (01/04/2018)

மத்திய அரசுக்கு வரி செலுத்த முடியாது... சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சியினர்!

தமிழக வாழ்வுரிமை கட்சியினர்

தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசுக்கு இனி தமிழகத்திலிருந்து எந்த வரியும் போகக்கூடாது என சுமார் 1000-க்கும் மேற்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் உளுந்தூர்பேட்டை சுங்க சாவடியை அடித்து நொறுக்கியுள்ளனர்.

அடித்து நொறுக்கப்பட்ட சுங்க சாவடி

"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதி மன்றம் கெடுவிதித்திருந்தது. ஆனால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. தமிழகத்தை அழிவு நிலைக்கு கொண்டு செல்லும் பல திட்டங்களை மத்திய அரசு தொடர்ச்சியாக அமல்படுத்தி வருகிறது. இதனை எதிர்த்து தமிழக மக்களின் வாழ்க்கையே தற்போது போராட்டக்களமாக மாறிவிட்டது. குறிப்பாக காவிரி தமிழகத்தின் உரிமை. இந்த விஷயத்தில் மத்திய அரசு மொத்தமாக தமிழகத்தை வஞ்சித்துவிட்டது.

அடித்து நொறுக்கப்பட்ட சுங்க சாவடி

தமிழகத்துக்கு காவிரி நீர் தரக்கூடாது, மற்ற நல்ல விஷயங்களையும் தமிழகத்துக்கு செய்து விட கூடாது என நினைக்கும் மத்திய அரசு. வரியை மட்டும் தமிழகத்திலிருந்து அதிகமாக வாங்குவது ஏன்? தமிழன் ஏமாந்தது போதும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கபடாமல் இனி தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு வரி செல்ல கூடாது.  சுங்கசாவடியின் மூலமாக மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி தமிழகத்திலிருந்து கிடைக்கிறது. இனி இது கிடைக்ககூடாது. அதனால், உளுந்தூர்பேட்டையில் இருக்கும் சுங்கசாவடியை அடித்து நொறுக்கினோம். இதற்கு தமிழக மக்கள் பேராதரவு அளித்துள்ளார்கள்" என தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சியினர்

சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய விவகாரத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.