வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (01/04/2018)

கடைசி தொடர்பு:14:00 (01/04/2018)

'மக்களின் குரல் தமிழக அரசுக்கு கேட்கவில்லை' - ஸ்டெர்லைட் போராட்டத்தில் கமல்ஹாசன்!

'நான் கமல்ஹாசனாக இங்கு வந்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். இந்த மக்கள் போராடும் வேப்பமரமே இப்போது எனக்கு மையம். இந்த மக்களுக்கே என ஆதரவு' என ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.
 

கமல்ஹாசன்

தூத்துக்குடி மாவட்டம் அ.குமரெட்டியாபுரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 49-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், போராடும் மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், "நான் ஓட்டிற்காகவோ மீடியாக்களின் விளம்பரத்திற்காகவோ இங்கு வரவில்லை. விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. கட்சியின் சாயல் இல்லாமல் ஒரு தமிழன் என்ற முறையில் வந்துள்ளேன். மக்களின் இந்த வேப்பமரத்தடி நிழல்தான் என் மய்யம்.   

கமல்ஹாசன்

மக்கள் உயிரை பற்றி கவலைப்படாத எந்த தொழிலும் தேவையில்லை. மக்களின் குரல் தமிழக அரசுக்கு கேட்கவில்லை. மத்தியில் இருப்போருக்கு கேட்கவேண்டும். குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் செய்வார்கள். இந்த மக்களின் போராட்டத்திற்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்." என்றார். முன்னதாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டகளத்தில் மக்களுடன் அமர்ந்து கமல்ஹாசன் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான கோஷம் எழுப்பினார்.