வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (01/04/2018)

கடைசி தொடர்பு:17:00 (01/04/2018)

`ஸ்டாலின் கைதைக் கண்டித்து சாலைமறியல்’ - கனிமொழி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் கைது!

சென்னையில் போராட்டம் நடத்திய திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். அதனைக் கண்டித்து நெல்லையில் சாலை மறியலில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி கைது செய்யப்பட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி

காவிரி விவகாரம் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி  ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், அனைவரும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், வி.சி.க. தலைவர் திருமாவளவன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்தாலும் காவிரி மேலாண்மை வாரியத்திற்காகப் போராட்டம் தொடரும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் தி.மு.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த தி.மு.க மகளிரணிச் செயலாளரான கனிமொழி எம்.பி., தலைமையில் தி.மு.க-வினர், நெல்லை சந்திப்பு அண்ணா சிலை முன்பாகத் திரண்டனர். 

கனிமொழி தலைமையில் அண்ணா சிலை முன்பாகக் கூடிய தி.மு.க-வினர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் இந்தக் கோரிக்கைக்காகப் போராடிய ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களைக் கைது செய்ததைக் கண்டித்தும் கோஷங்களை.எழுப்பியபடி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கனிமொழி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் ஆர்.கே.வி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க