`போராட்டக்காரர்களிடம் ரூ.600 கோடி பேரம் பேசியுள்ளது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்!’ - கமல் குற்றச்சாட்டு

மக்களின் உயிரை விட எந்தத்தொழிலும் நல்லதல்ல. அதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிடுவது கூட நல்லதுதான்" என கமல்ஹாசன் தெரிவித்தார். 

செய்தியாளர்களிடம் பேசிய கமல்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் போராட்டம் வெடித்துள்ளது. வர்த்தகர்கள், விவசாயிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆலைக்கு எதிராகப் போராடி வருகின்றனர். ஆலையின் விரிவாக்கத்தை எதிர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் குமரெட்டியாபுரம் மக்களை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களின் தொடர் போராட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. விளம்பரத்திற்காக நான் இங்கே வந்திருப்பதாக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி உள்ளார். நான் 5 வயதிலேயே கேமிரா முன்பாக வந்தவன். ஆயிரம் கேமிராவைக் கண்டவன். மக்களே எனக்கு தேவைக்கு அதிகமான விளம்பரத்தை தேடித் தந்திருக்கிறார்கள். அதனால், நான் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்காமல் இருக்க ரூ.5 கோடி வீதம் 120 பேருக்கு ரூ.600 கோடி கொடுப்பதாக ஆலை நிர்வாகம் என பேரம் பேசி உள்ளது.அந்தப் பணத்தை இந்த ஆலையால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு கொடுக்க ஏன் மறுக்கிறார்கள்?. சட்ட விதிமுறைகளை மீறி இந்த ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டதில் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறது. அவர்களது அனுமதியும், ஒத்துழைப்பும் இல்லாமல் இவ்வளவு பெரிய தவறு நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ஆலையின் விரிவாக்கப் பகுதி சிப்காட் வளாகத்தின் உள்ளே இருப்பதாக ஆலை நிர்வாகம் சொல்வது கூட தவறானது என தெரியவந்துள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலும் நேற்றோடு (31.03.18) முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் ஆலையானது பராமரிப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் ஆலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தினால் எந்தவித தவறையும் கண்டுபிடிக்க முடியாது. அதற்காகவே திட்டமிட்டு பராமரிப்பு என்ற பெயரில் உற்பத்தியை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். தற்போது போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த நான், இனி, அவர்களின் குரலைச் செல்லும் இடமெல்லாம் கொண்டு சேர்ப்பேன். போராடும் மக்களுக்காக சட்டரீதியான போராட்டத்தையும் மக்கள் நீதி மய்யம் முன் எடுத்துச் செல்லும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!