வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (01/04/2018)

கடைசி தொடர்பு:15:20 (01/04/2018)

`ஸ்டெர்லைட் போராட்டத்தின் மூலம் கமலும் ரஜினியும் விளம்பரம் தேடுகிறார்கள்!’- அமைச்சர் கடம்பூர் ராஜூ

" ஸ்டெர்லைட் போராட்டத்தை வைத்துக் கொண்டு ரஜினியும், கமலும் போராட்டத்தில் தாங்களும் கலந்து கொள்வதுபோல, ஒரு மாயையை உருவாக்கி அதன் மூலம் விளம்பரம் தேடி வருகிறார்கள்" என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
 

செய்தியாளர்களிடம் பேசும் அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கதிரேசன் கோயில் மலையில் உள்ள சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அஅமைச்சர் கடம்பூர் ராஜூ," இந்து சமய அறநிலையத்துறை மூலமாக மலேசியாவில் உள்ள முருகன் போன்று இங்கு 110 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தன்படி,அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகாகும்பாபிஷேக விழாவின் போது, முருகனின் திருவுருவச்சிலை  பொதுமக்களின் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு  முதன்முதலில் அனுமதி அளிக்கப்பட்ட காலத்தில் தி.மு.க.,தான் 25 ஏக்கருக்கும் மேல் இடம் ஒதுக்கீடு அளித்துள்ளது. சுமார் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த ஆலையில் தற்போது விரிவாக்கம் செய்யபடும்போது, மக்களிடம் அச்ச உணர்வு எழுந்துள்ள நிலையில், பொது மக்கள் உணர்வுடன் போராடி வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம், உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர். அத்துடன், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் துறை ரீதியாக ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தி, அந்த அறிக்கையைச் சுற்றுச்சுழல்துறை அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளது. அமைச்சரும் தெளிவான அறிக்கை தந்துள்ளார். அந்த அறிக்கையின் அடிப்படையில்  அனைத்து துறைகளின் கருத்துக்களை முதல்வர் கேட்டறிந்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் விரைவில் முதல்வர் நல்ல முடிவினை அறிவிப்பார்.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் கமலும், ரஜினியும் கலந்து கொள்வது போன்ற ஒரு மாயை தோற்றுவிக்கின்றனர். இதனை வைத்து விளம்பரம் தேடிக் கொள்கின்றனர். அரசுதான் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து மக்களைக் காப்பற்ற முடியும். மக்களின் உணர்வுகளை மதித்து அரசு தனது பணியை சிறப்பாக செய்து வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியப் பிரச்சினையில் ஆளும் கட்சி மத்திய அரசுக்கு ஆதரவாக இருப்பதாக தோற்றத்தினை உருவாக்கினார்கள். ஆனால், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தமிழக தொடர்ந்துள்ளது. வரும் 3-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது, காவிரிமேலாண்மை வாரியத்தினை இந்த அரசு நிச்சயம் பெற்றுத் தரும். அ.தி.மு.க., உண்ணாவிரதம் எனது நாடகம் கிடையாது. தி.மு.க.,ஈழப் பிரச்சினையில் இருந்த உண்ணாவிரதம்தான் நாடகம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க