`ஸ்டெர்லைட் ஆலையிடம் லஞ்சம் பெற்ற அதிகாரிகள்!’ - திருமுருகன் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி வரும் மக்களுக்கு எதிராக செயல்பட ஆலை நிர்வாகத்திடம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் லஞ்சம் பெற்றுள்ளதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசும் திருமுருகன் காந்தி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி வரும் குமரெட்டியாபுரம் கிராம மக்களைச் சந்தித்து திருமுருகன் காந்தி ஆதரவு தெரிவித்தார். கிராமத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு வரும் ஆலையின் விரிவாக்கப் பகுதிகளை பார்வையிட்ட அவர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், " ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இந்தப்பகுதி மக்கள் கடந்த 23 வருடங்களாக தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆலையின் விரிவாக்கத்தை எதிர்க்கும் குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தங்களின் சொந்த கிராமத்தில், சொந்த நிலத்தில் பந்தல் போடக்கூட காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் அனுமதி மறுத்து வருவது கண்டனத்திற்குரியது. அரசியல் சாசன உரிமையின் அடிப்படையில் எதிர்ப்பை தெரிவிக்கவும், போராடவும் பொதுமக்களுக்கு உரிமை உள்ள நிலையில் சட்டவிரோதமாக பந்தல் போட அனுமதி மறுப்பதால் வெயில், மழை என்று பாராமல் குழந்தைகள், வயதானவர்கள் உள்ளிட்ட அனைவரும் போராடி வருகிறார்கள்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்திக்கக் கூட அதிகாரிகள் யாரும் வரவில்லை. சந்திக்க வந்த தூத்துக்குடி சார் ஆட்சியர்  கூட, நிலத்தடி நீரை பரிசோதனைக்கு எடுத்துச் செல்லாமல் தாமிரபரணி குடிநீரை சோதனைக்கு கொண்டு சென்றுள்ளார். இந்த அளவுக்கு லண்டனில் வசிக்கும் வெளிநாட்டுக்காரரான அனில் அகர்வாலின்  நிறுவனத்திற்கு  அக்கறையுடன் உதவி செய்வது எதற்காக?. மாவட்ட நிர்வாகத்தினரும், காவல்துறை அதிகாரிகளும் ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொண்டு செயல்படுகிறார்கள் என பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன்.

போராடும் மக்களுக்கு பந்தல் போட அனுமதி மறுக்கப்படுமானால், பல்வேறு அமைப்புகளைத் திரட்டி நாங்களே பந்தல் போடும் பணிகளை மேற்கொள்வோம். ஸ்டெர்லைட் ஆலை செயல்பட, ஆளும் கட்சி மட்டுமல்லாமல், ஆண்ட கட்சியான தி.மு.க.,விற்கும் பங்கு உள்ளது. அதேபோல், மத்தியில் ஆளும் மோடி அரசும், ஆண்ட மன்மோகன் சிங் அரசிற்கும் பங்கு உள்ளது. அதனால், அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து போராடும் மக்களுக்கு ஆதரவு அளிப்பதுடன் ஆலையை மூடும் பணியைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், தேர்தல் நேரத்தில் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க முடியாது என்ற முடிவை இப்பகுதி மக்கள் எடுப்பார்கள்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!