மீண்டும் ஒரு போராட்டமா? - போலீஸ் கட்டுப்பாட்டில் மெரினா கடற்கரை

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தப்படலாம் என்று வெளியான தகவலை அடுத்து, அப்பகுதியில் போலீஸார் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீண்டும் ஒரு போராட்டமா? - போலீஸ் கட்டுப்பாட்டில் மெரினா கடற்கரை

 

மெரினா கடற்கரை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி மெரினா கடற்கரையில் இளைஞர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கி விடக்கூடாது என்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் சென்னை போலீஸார். 

மெரினா

காவிரி விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த தவறியதையடுத்து, மத்திய அரசைக் கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள், விவசாயிகள் அமைப்புகள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், தமிழ்நாடு வணிகர் சங்கம், தமிழ்நாடு மருந்தகங்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். 

மெரினா

முன்னதாக, சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பின்னர், போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலும், 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், குடும்பத்துடன் கூடி மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளைக் கையில் ஏந்தியவாறு, அரசுக்கு எதிராகக் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை, சற்றும் எதிர்பார்க்காத போலீஸார், போராட்டக்காரர்களைச் கைது செய்தனர். அவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். 

இதனால், மெரினாவில் பலமடங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று விடுமுறை நாள் என்பதால் மக்கள் மெரினாவில் அதிகளவில் கூடுவார்கள். அதனால், 500-க்கும் மேற்பட்ட போலீஸார் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மீண்டும் ஒரு போராட்டம் நடைபெறக் கூடாது என்ற முனைப்பில் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். அதனால், பலத்த சோதனைக்குப் பிறகே மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், மெரினா கடற்கரையை ஒட்டிய சர்வீஸ் ரோட்டில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், காமராஜர் சாலையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!