வெளியிடப்பட்ட நேரம்: 21:04 (01/04/2018)

கடைசி தொடர்பு:21:04 (01/04/2018)

குமரெட்டியாபுரத்தைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் திரண்ட மற்றொரு கிராமம்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி வந்த குமரெட்டியாபுரம் கிராம மக்களைத் தொடர்ந்து, இதன் அருகில் உள்ள பண்டாரம்பட்டி கிராம மக்களும் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் திரண்ட பண்டாரம்பட்டி மக்கள்

ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு அரசு அனுமதி அளிக்கக் கூடாது. தற்போது செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தியும் கடந்த 49 நாட்களாக கிராமத்தில் வேப்பமர நிழலில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த மக்களுக்கு ஆதரவாகவும், ஆலையை மூடிட வலியுறுத்தியும் கடந்த மார்ச் 24-ம் தேதி, தூத்துக்குடி நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மீனவர்கள், உப்பளத் தொழிலாளர்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஆகியோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், மினி பஸ்கள், ஆட்டோக்கள், தியேட்டர்கள் ஆகியவையும் இயங்கவில்லை.

கமல், சீமான், சரத்குமார் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்களும், சமூக அமைப்பினைச் சேர்ந்தவர்களும் குமரெட்டியாபுரம் கிராம மக்களை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர். தொடர்ந்து மக்களுடன் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிச் சென்றனர். பல கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இன்று, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.கோபாலன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த குமரெட்டியாபுரம் கிராமத்தை அடுத்துள்ள பண்டாரம்பட்டி கிராமத்து மக்களும் ஊருக்குப் பொதுவான இடத்தில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். " இந்த நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையால் நாங்களும் பாதிக்கப்பட்டு உள்ளோம். இந்த நச்சு ஆலை தூத்துக்குடியில் இருக்கவே கூடாது. குமரெட்டியாபுரம் கிராம மக்களின் உறுதியான போராட்டத்தைப் பார்த்து நாங்களும் போராட்டத்தை துவக்கி உள்ளோம் . இந்த ஆலை மூடப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்." என்கின்றனர் ஊர்மக்கள். "அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது, ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது" என போலீஸார் கூறியதால், பொதுமக்கள் போலீஸாரை முற்றுகையிட்டனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. அடுத்தடுத்த நாட்களில் , இந்த ஆலையால் பாதிக்கப்பட்ட அடுத்தடுத்த கிராம மக்களும் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக கூறி வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க