வெளியிடப்பட்ட நேரம்: 03:52 (02/04/2018)

கடைசி தொடர்பு:15:02 (09/07/2018)

புதுக்கோட்டையில் இயேசு உயிர்த்தெழுந்த நாள் சிறப்பு கொண்டாட்டம்..!

புதுக்கோட்டை, அன்னவாசல் பகுதிகளில் இயேசு உயிர்த்தெழுந்த நாளான இன்று பல்வேறு தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. சிறுவர், சிறுமிகள் இயேசுவின் பாடுகளை நினைவு கூறும் விதமாக, சிலுவைப் பாதை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றனர்.


இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் மற்றும் மரணத்தை குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாள்கள் தவக்காலம் அனுசரிக்கின்றனர். இந்த நாட்களில் அவர்கள் இயேசுவின் மலைப் பிரசங்கம், ககாட்டிக்கொடுக்கப்படுவதற்கு முன்பு கெத்சமனே  பூங்காவில் உலகமக்களுக்காக வியாகுலப்பட்டு, வியர்வைத் துளிகளைப் பெரும் ரத்தத்துளிகளாக சிந்தி ஜெபித்தது, ரோமானிய அரசன் பொந்தி பிலாத்துவிடம் கொண்டு செல்லப்பட்டு அங்கு யூதர்களின் மனவிருப்பப்படி மரணத்துக்கேதுவான தண்டனை இயேசுவுக்கு வழங்கப்பட்டது. அங்கே ரோம படைவீரர்கள் இயேசுவை 39- முறை முற்கள் நிரம்பிய வாரினால் அடித்து துன்பப்படுத்தியது. அதன்பின் இயேசு சிலுவையை சுமந்துக்கொண்டு கொல்கொதா மலை வரை  நடத்திச் செல்லப்பட்டது. அங்கு இரு கள்வர்கள் நடுவே இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்தது போன்ற நிகழ்வுகளை நினைவுக்கூருவார்கள். உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ பெருமக்கள் தங்களை ஒடுக்கி, அடக்கி இறைவனின் சித்தத்துக்கு ஒப்புக்கொடுப்பதே இந்த தவக் காலம். புதுக்கோட்டை மாவட்டத்திலும் இவை கடைபிடிக்கப்பட்டது. அதிலும் அன்னவாசல் பகுதியில் கடந்த 30-ம் தேதி புனித வெள்ளி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அன்று  அன்னவாசல் பகுதிகளில் உள்ள  அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. 

முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை மும்மணி ஆராதனையிலும் பிரார்த்தனையிலும் கிறிஸ்தவர்கள் உபவாசத்துடன் பங்கேற்றனர். கத்தோலிக்க தேவாலயங்களில் மாலையில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இயேசு உயிர்த்தெழுந்த நாளான நேற்று(01.04.2018.)  பண்டிகையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அன்னவாசல் எலிசபெத் ஆலயத்தில் வயலோகம் பங்குதந்தை விஜயக்குமார் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

மேலும் இலுப்பூர் அந்தோணியர் ஆலயம், வயலோகம் இருதய ஆண்டவர் ஆலயம், மகுதுப்பட்டி சகாயமாத ஆலயம், பசுமலைப்பட்டி மலைமாதா ஆலயம், முக்கண்ணாமலைப்பட்டி மாதாகோவில், பொம்மாடிமலை, பெருஞ்சுனை, பணம்பட்டி போன்ற இடங்களில் உள்ள தேவாலயங்களில் இயேசு உயிர்த்தெழுந்த சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவ மக்கள் கலந்துகொண்டு பிரார்தனையில் ஈடுபட்டனர். சிறுவர், சிறுமிகள் சிலுவைப் பாதை சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.