வெளியிடப்பட்ட நேரம்: 05:20 (02/04/2018)

கடைசி தொடர்பு:08:50 (02/04/2018)

போலீஸ் உடையணிந்து ஆள் கடத்தல்..! பெண் உள்பட ஐந்து பேர் கைது

காவல்துறை அதிகாரி போல உடையணிந்து வந்து, ஆள் கடத்தலில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். 

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சோமசுந்தரம் நகரைச் சேர்ந்தவர், உலகநாதன். இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்.
சம்பவத்தன்று (30-3-18) காலை, இவர் வீட்டில் இருந்தபோது, பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போல வேடமணிந்த ஒரு பெண் மற்றும் காக்கி உடை அணிந்த சிலர் உள்பட 8 பேர் வந்தனர். அவர்கள், ''உங்கள்மீது புகார் வந்துள்ளது, அதுகுறித்து விசாரிக்க வேண்டும்'' என்று  போலீஸ் நிலையத்துக்கு வரும்படி அழைத்தனர். 

 உலகநாதன், அவர்களின் காரில் ஏற மறுத்து, தன்னுடைய காரில் ஏறிச் சென்றார். பின்னர், உலகநாதனை தேனி ஆண்டிபட்டி அருகே உள்ள சுப்லாபுரம் விலக்கு என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் தோப்பில் அடைத்துவைத்தனர். மறுநாள், உலகநாதனின் போனைப் பயன்படுத்தி, அவர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்கு போன் பண்ணி, உலகநாதனின் மனைவி விஜயலட்சுமியிடம், '10 லட்ச ரூபாய் தராவிட்டால் உலகநாதனைக் கொலை செய்துவிடுவோம்' என மிரட்டியுள்ளனர். 

 பணத்தை, 31-ம் தேதி மதியத்திற்குள் பாண்டிகோயிலுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதுகுறித்து விஜயலெட்சுமி, சிவகங்கை மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனுக்குத் தகவல் தெரிவித்தார். அவருடைய உத்தரவின் பேரில் சிவகங்கை துணை காவல் கண்காணிப்பாளர் மங்களேஸ்வரன் தலைமையில், சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் மோகன் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரஞ்சித், ராமச்சந்திரன், ஏட்டுகள் பாண்டியராஜன், மருதுபாண்டியன் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

 அவர்கள், விஜயலெட்சுமி மற்றும் அவரது மகன் ஆகியோரை அழைத்துக்கொண்டு, பாண்டிகோயில் சென்றனர். பின்னர் தனிப்படை போலீசார், தனித்தனியாகப் பிரிந்து நின்றனர். அப்போது, உலகநாதனைக் கடத்தியவர்களில் ஒருவர், விஜயலெட்சுமியிடம் பணத்தை வாங்க வந்தார். அவரைப் பார்த்த விஜயலெட்சுமி, 'தன் கணவரைக் கடத்திச்சென்றவர் இவர்தான்' என அடையாளம் காட்டினார். உடனே, தனி படை போலீஸார் அவரை மடக்கிப்பிடித்தனர். பின்னர், அவர் கொடுத்த தகவலின் பேரில், கடத்தப்பட்ட உலகநாதனை மதுரை உசிலம்பட்டி அருகிலுள்ள பண்ணை வீட்டிலிருந்து மீட்டனர். 

இதைத் தொடர்ந்து, தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தியதில், மதுரை காளவாசலைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (31), மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த சாந்தி (41) (இவர்தான் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போல வேடமணிந்து சென்றவர்) மற்றும் பெரியகுளம் தேவதானப்பட்டியைச் செர்ந்த காசிமாயன் (34), மதுரை ஒத்தகடையைச் சேர்ந்த அகஸ்டீன் (27), ஆண்டிபட்டி ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (32) ஆகிய 5 பேரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாய் உள்ள சேகர் சிலம்பரசன்,  தேனியைச் சேர்ந்த பாண்டியன் ஆகியோரைத் தேடிவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க