வெளியிடப்பட்ட நேரம்: 10:07 (02/04/2018)

கடைசி தொடர்பு:19:17 (03/04/2018)

‘ராக்கம்மாவுக்கு நல்ல உணவு கிடைக்க வேண்டும்!’ - கலங்கவைத்த கரூர் கலெக்டர்

மாவட்ட ஆட்சியர் ஏழை மூதாட்டிக்கு உணவளித்து உதவித் தொகை பெறுவதற்கான உத்தரவை வழங்கினார்.

‘ராக்கம்மாவுக்கு நல்ல உணவு கிடைக்க வேண்டும்!’ - கலங்கவைத்த கரூர் கலெக்டர்

ரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், ஏழை மூதாட்டிக்கு விருந்தளித்து, உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவை நேரடியாக வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் பரிவு

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், திங்கள்கிழமை மக்கள் குறைதீர்ப்பு நாள். அன்றைய தினம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும். மக்கள், மாவட்ட ஆட்சியரை நேரடியாகச் சந்தித்து மனு அளிப்பார்கள். அந்த வகையில், கரூர் மாவட்டம் சின்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராக்கம்மாள் என்ற 80 வயது மூதாட்டி, முதியோர் உதவித்தொகை வழங்க மனு அளித்திருந்தார். ராக்கம்மாளுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. கிராமத்தில் தனியாக, ஒரு குடிசையில் வசித்துவருகிறார். ராக்கம்மாளின் மனுவைப் பரிசீலித்த கலெக்டர் அன்பழகன், அந்த மூதாட்டிக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார். 

மூதாட்டியுடன் ஆட்சியர்

அதோடு, மூதாட்டியை நேரில் சந்தித்து உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவை வழங்கவும் முடிவுசெய்தார். வறுமையால் வாடும் ராக்கம்மாளுக்கு, நல்ல உணவு வழங்க விரும்பிய கலெக்டர், அவருக்குத் தன் வீட்டில் உணவு தயாரித்து எடுத்துச்சென்றார்.  ராக்கம்மாளின் வீட்டுக்குச் சென்று, அவர் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவை வழங்கினார். அவருக்காகத்  தன் வீட்டிலிருந்து  எடுத்துச்சென்ற உணவை, இலை போட்டுப் பரிமாறினார்.

அப்போது ராக்கம்மாள், ஆட்சியரைத் தன்னுடன் அமர்ந்து உணவு உண்ண வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அதனால், ஆட்சியர் அன்பழகனும் தரையில் அமர்ந்து மூதாட்டியுடன் உணவு உண்டார். மாவட்ட ஆட்சியருக்கு மூதாட்டி ராக்கம்மாள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் செயலை மக்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க